இந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன்! – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி

“இந்திய – இலங்கை உறவை உயர்மட்டத்துக் கொண்டு செல்ல எனது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவுக்கான இரண்டு நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்துக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தனது முதலாவது அரசமுறை வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கோட்டாபயவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து கோட்டாபயவை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் முக்கியமானதொரு சந்திப்பாகும் எனத் தெரிவித்தார்.

புதிய இலக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய இந்திய ஜனாதிபதி, இதற்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கோட்டாபய, இந்திய – இலங்கை உறவை உயர்மட்டத்துக் கொண்டு செல்ல தனது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்தியப் பொதுப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வீ.கே. சிங் மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ராஜ் காட் சென்ற கோட்டாபய, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் அவர் இதன்போது கையெழுத்திட்டார்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *