மஹிந்த – பஸில் – கோட்டா மூவரும் கூட்டாகக் கூட்டமைப்புடன் பேசுவர்! – சுமந்திரனுடன் நேரடியாகவே தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கோட்டா கோரிக்கை

தாமும் தமது சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றார்கள் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியுடன் நேற்றுத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரினார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

“தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட – அவசர நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் கிடையாது” என சுமந்திரன் எம்.பி. நேரடியாகவே கோட்டாபயவுக்குச் சுட்டிக்காட்டினார்.

“இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்சவுடன் சந்தித்துப் பேசி விட்டேன். ஆனால், அவர் உருப்படியான – தெளிவான யோசனைத் திட்டம் எதையும் வெளிப்படுத்தவில்லை” என்ற அதிருப்தியையும் கோட்டாபயவுக்கு சுமந்திரன் எம்.பி. தெரியப்படுத்தினார்.

“அப்படியான யோசனைகள் குறித்துப் பேசித் தீர்மானிக்கவே நாங்கள் மூவரும் (மஹிந்த, பஸில், கோட்டா) உங்கள் தரப்பைச் சந்தித்துப் பேச விரும்புகின்றோம்” எனக் கோட்டாபயவால் பதிலளிக்கப்பட்டது.

“நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் போகின்றீர்கள். அதற்கு முன்னர் சந்திக்கலாமா அல்லது நீங்கள் சிங்கப்பூர் சென்று திரும்பிய பின்னர் சந்திக்கலாமா?” என சுமந்திரன் எம்.பி. கோட்டாபயவிடம் கேட்டார்.

சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோரின் நேர வசதியை அறிந்துகொண்டு மீண்டும் சுமந்திரனுடன் தாம் தொடர்பு கொள்வார் எனக் கோட்டாபய பதிலளித்திருக்கின்றார்.

தமிழர் தரப்புடன் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் தீர்மானித்திருக்கின்றார்கள் என்று அவர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று (‘காலைக்கதிர்’) இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *