தனித்துப் போட்டியிட்டாலும் சு.க. வெற்றிபெறுவது உறுதி! – குமார வெல்கம கூறுகின்றார்

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறெந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டிய தேவையில்லை. தனித்துப் போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும். இது உறுதி.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சிந்தித்தால் நாம் தனித்தே போட்டியிட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதில் சின்னம் குறித்து இரு தரப்பிலும் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றமையை அறியமுடிகின்றது. ஆனால், தற்போது கட்சியோ சின்னமோ முக்கியத்துவமல்ல. நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடத் தீர்மானித்தாலும் எனக்கு அதில் திருப்தியிலில்லை. காரணம் யாருடனும் கூட்டணி அமைப்பதை நான் விரும்பவில்லை.

ஏனைய சிறு கட்சிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அவ்வாறு தனித்துப் போட்டியிட்டாலும் நிச்சயமாக வெற்றி பெற முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *