ஐ.நா. அறிக்கையாளரின் கருத்துக் காத்திரமானது! – கிழக்கு முன்னாள் முதல்வர் வரவேற்பு

“இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் பாதுகாப்புத் தரப்பினர் தோல்வியடைந்துள்ளனர் என ஐ.நாவின் மதச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்திருப்பது மிகவும் காத்திரமான கருத்தாகும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 15ஆம் திகதி நமது நாட்டுக்கு வருகை தந்த அவர், 26ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து கள நிலைமைகளை நேரில் சென்று அறிந்திருக்கின்றார். இந்தநிலையில், அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் மிகக்காத்திரமானதும் உண்மையை உரக்கச் சொல்லியுள்ளன எனவும் நாம் கருத வேண்டியுள்ளது.

குறிப்பாகப் பௌத்தர்கள் சிறுபான்மையினராக வாழும் பிரதேசங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளை அமைக்கவும் புத்தர் சிலைளை நிறுவுவதற்கும் அரசு அனுமதி வழங்குகின்றது. எனினும், பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஏனைய மதத்தவர்கள் தமது வழிபாடுகளைச் சுதந்தரமாக செய்ய முடியாத நிலைமை உள்ளது எனப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும், இந்த விடயத்தில் அரசு பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருப்பது அவதானத்துக்கு உரியது.

‘மதத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. அரசியல் செயற்பாடுகளில் மத நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்ற கருத்தை துலாம்பரமாக பதிவு செய்துள்ள அவர், நம்நாட்டு அரசியல் அரங்கு எத்தகைய நிலையில் நகர்கின்றது என்பதை நசுக்காக சுட்டிக்காட்டியிருப்பதும் எண்ணத்தில் கொள்ளத்தக்கதாகும்.

‘சர்வதேச சட்டங்களுக்கும் தரநியமங்களும் அமைவாக வெறுப்புணர்வு பேச்சுகளை கண்காணிப்பதற்கான கட்டமைப்பு ஒன்றை அரசு உருவாக்கவேண்டும்’ என்ற அவரது ஆலோசனையும் மிகவும் சிறப்பானது என்பதையும் இங்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவரது கருத்துக்களை அரசு கவனத்தில்கொண்டெனும் முஸ்லிம் மக்கள் சமகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைளைக் களைய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *