கிராம எழுச்சித் திட்டம்தானா இனப் பிரச்சினைக்குத் தீர்வு? – கூட்டமைப்பிடம் கேட்கிறார் நாமல் எம்.பி.

“நல்லாட்சி அரசில் கிராம எழுச்சித் திட்டம்தானா தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு. தென்னிலங்கை அரசுகளை விட தமிழ் மக்களை தென்னிலங்கையில் அடமானம் வைத்து சுயலாப அரசியல் பிழைப்பு நடத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச இந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இதன்போது கூட்டமைப்பை விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அதற்குப் பதில் கூறும் விதமாக நாமல் ராஜபக்சவின் பெயரில் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தும், பொய்யான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசாவின் பிள்ளைகள் வெளிநாட்டில் கல்வி கற்கின்றனர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை நிதி நிறுவனத்துடன் தொடர்புபடுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை, புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“எம்மைப் பார்த்து விரல்களை நீட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தாங்கள் சிறந்த தலைவர்களாக இருக்கின்றோமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது வருகையை கண்டு கொதிப்பதை விட, மக்களுக்கு இதய சுத்தியுடன் நேர்மையாக இருக்க முற்பட வேண்டும். தமது வாக்கு வங்கிக்காக பொய்யான வாக்குறுதிகளையும் போலித் தமிழ்த் தேசியத்தையும் விதைப்பதற்கு முற்படக் கூடாது. வரலாற்றை நோக்கினால் தமிழர்களுக்கு தீர்வை வழங்க மறுத்து திட்டமிட்ட அழிவுகளை ஏற்படுத்தியது ஐ.தே.கவே. இதனை மறுக்க முடியுமா?

புதிய அரசமைப்பில் கூட்டாட்சியைப் பெற்று தருகின்றோம் என்று கூறிய நீங்கள் இன்று சமுர்த்தியில் மக்களை இணைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சிக்கின்றீர்கள். தமிழ்த் தலைவர் மீது எமக்கு எவ்விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் அரசியலுக்காக கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாது சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விவரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் முகத்திரையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் தயங்கப்போவதில்லை என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றேன்” என்று அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *