Lead NewsLocal

போரில் நடந்தவைகளை இனிப் பேசிப் பயனில்லை! யாழ். மக்கள் தீர்வைக் கேட்கவில்லை!! – இப்படிக் கூறுகிறார் மஹிந்தவின் சகா

“போர் நடந்த காலத்தில் நடந்தவற்றைப் பேசிப் பயனில்லை. எத்தனை காலம் அதைப் பற்றிப் பேசுவது?. பேசிப் பேசி என்ன கிடைத்திருக்கின்றது? யாழ்ப்பாண மக்கள் அரசியல் தீர்வைக் கேட்கவில்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக் கிளிநொச்சி சென்றிருந்தார். அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் யாழ்ப்பாணம் வந்து வாக்கு இல்லாமலேயே வேலை செய்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் எமக்கு வாக்கிடுவதில்லை. நாம் வாக்கைப் பார்த்து வேலை செய்வதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்காரர். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ரணில் விக்கிரமசிங்க வீட்டில்தான் இருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காசுக்காகவே வேலை செய்கிறரார்கள். மக்களின் பிரச்சினைகளுக்காக அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சப்போர்ட் கொடுத்தாகிவிட்டது, சரத் பொன்சேகாவுக்கும் சப்போர்ட் கொடுத்தாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கின்றது என்று பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்தது அரசியல் தீர்வு எடுக்கப்பதற்காக என்று கூறப்பட்டது. ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

போர் முடிந்தவுடன் நாம் மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்தோம். மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அனைத்தையும் கொண்டு வந்தோம். போரை முடித்தவுடன் எமக்குத் தேர்தலை வைக்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. அதுமட்டுமல்ல நாம் அபிவிருத்திகளையும் மேற்கொண்டோம்.

போர் இடம்பெற்ற காலத்தில் கிளிநொச்சி நகரம் எவ்வாறு இருந்தது? இப்போது எவ்வாறு இருக்கின்றது?. இதையெல்லாம் நாமே அபிவிருத்தி செய்தோம். இப்போதுள்ள அரசு கடந்த நான்கரை வருடத்தில் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணத்தை எடுத்துக் கொண்டு கொழும்பில் சும்மா இருக்கின்றது. அவர்கள் அமைச்சர்களாக வந்து மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதுவும் செய்ய மாட்டார்கள். நான் இன்று கிளிநொச்சி மைதானத்தைப் போய்ப் பார்த்தேன். நான் அமைச்சராக இருந்தபோதுதான் அது ஆரம்பிக்கப்பட்டது. இன்னமும் செய்து முடிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சர்களுடன் பேச மாட்டார்கள். அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்து அவரின் காசை எடுத்து எதையும் செய்யாமல் இருப்பார்கள்.

எமது ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார். அவர் அறிவித்தவுடன் நாங்கள் தேர்தல் முன்னெடுப்புக்களை ஆரம்பிப்போம். நாம் இப்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழ் மக்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். இத்தனை காலம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்து அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது வழங்குவது என்றால் அது மஹிந்த ராஜபக்சவால் மட்டுமே முடியும். ரணில் விக்கிரமசிங்க ஒருநாளும் வழங்கமாட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதுவும் செய்யவில்லை. அரசியல் தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களும் இல்லை.

தமிழ் மக்களே இனிமேல் எம்முடன் பயணம் செய்யுங்கள். எமக்கு வாக்குப் போடுங்கள். உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கின்றோம். அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசுவோம். நாம் அதற்குத் தயராக இருக்கின்றோம். எமக்குத் தெரியும் தமிழ் மக்களுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று. எமது வேட்பாளரே ஜனாதிபதியாக வருவார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளருக்கு 4 பேர் பெயரிடப்படுகின்றனர்.

நீங்கள் நினைக்கிறீர்கள் மஹிந்த ராஜபக்ச சிங்களத் தலைவர் என்று. அவ்வாறு நினைக்காதீர்கள். அவர் தமிழ் மக்களுக்கு அதிக வேலைகள் செய்திருக்கின்றார். அவரே போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். மலைநாட்டில் தமிழ் மக்களுக்கு எவ்வளவோ வேலைகள் செய்திருக்கின்றோம். இந்தனை வருடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தீர்கள். எமக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்.

எமக்கு எந்தப் பிறசரும் இல்லை, கொலஸ்ரோலும் இல்லை, காட் அற்றாக்கும் இல்லை. நாம் ‘பிற்றாகவே’ இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து யார் வந்தாலும் எமக்குப் பரவாயில்லை. யார் வந்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒன்றுமே செய்யவில்லை.

யாழ்ப்பாணம் மக்கள் அரசியல் தீர்வைக் கேட்கவில்லை. அவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். எமது காலத்தில் வெள்ளை வான் என்றதெல்லாம் பொய். அது ஐக்கிய தேசியக் கட்சி கூறிய கதை. இப்போது போர் முடிந்துள்ளது. சமாதானம் இருக்கின்றது. கடந்ததை மறந்து இணைந்து வேலை செய்வோம்.

போர் நடந்த காலத்தில் ஆள்கள் காணாமல்போனார்கள். அது நடந்துள்ளது. கொழும்பில் எல்.ரி.ரி.ஈ. குண்டு போட்டபோது எமது ஆள்களும் காணாமல்போனார்கள். நாங்கள் என்ன செய்வது? போர் நடந்த காலத்தில் நடந்தவற்றைப் பேசிப் பயனில்லை. எத்தனை காலம் அதைப் பற்றிப் பேசுவது? பேசிப் பேசி என்ன கிடைத்திருக்கின்றது? அதை விடுத்து நாம் இணைந்து வேலை செய்வோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading