Lead NewsLocal

விக்கியின் கீழ்த்தர வார்த்தைக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“அரசின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவி கொடுக்காது.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவாகரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு மாமா வேலை செய்கின்றது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாகத் வெளிப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அநாவசியமாகத் தலையிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினைச் செய்ய வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில்தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாக வேண்டும். இது அவர்களின் பிரச்சினை. இதனை தீர்க்கத் தெரிவுக்குழு அமைத்துக் கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை. ஆனால், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அநாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் குழப்புவது கண்டிக்கத்தக்கது.

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கின்றது. ஆனால், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாகத் தெரிவித்து வருகின்றோம்.

விரைவில் இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார்” – என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading