குருணாகல் வைத்தியர் நிரபராதி! – சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு அறிக்கை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு, கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றைத் தடுக்கும் எந்தச் சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

வைத்தியர் ஷாபியின் சிகிச்சையையடுத்து மகப்பேறு பாதித்துள்ளது எனப் பல பெண்கள் முறைப்பாடுகளைச் செய்து வருகின்ற போதிலும், அவர்கள் எவரும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வரத் தயங்குகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

மேற்படி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.

வைத்தியர் ஷாபி சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையில், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குருணாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய வைத்தியசாலைகளில், வைத்தியர் ஷாபியிடம் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களே தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

எனினும், இது தொடர்பில் நடத்திய ஆய்வில் கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றைத் தடுக்கும் எந்தச் சிகிச்சைகளையும் வைத்தியர் ஷாபி வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளது சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு அறிக்கை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *