சஹ்ரானின் மடிக்கணினி பாலமுனையில் சிக்கியது! – 50 இலட்சம் ரூபா பணமும் தங்க நகைகளும் மீட்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்தினார் என நம்பப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா பணம், தங்க நகைகள் ஆகியவற்றை அம்பாறை – பாலமுனையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சஹ்ரான் குழுவின் அம்பாறை மாவட்டத் தலைவரான கல்முனை சியாமிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைவாகவே 50 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சியாம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், சியாம் வழங்கிய தகவலுக்கு அமைவாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 15 இலட்சம் ரூபாவைப் பொலிஸார் கைப்பற்றியிருந்த நிலையில், மிகுதி 35 இலட்சம் ரூபாவை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

சியாமின் மாமனாரின் வீட்டிலிருந்து ஒரு தொகைப் பணத்தைக் கைப்பற்றியிருந்த பொலிஸார், பாலமுனையிலிலுள்ள வீடொன்றின் இயந்திரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிகுதித் தொகைப் பணத்தை மீட்டுள்ளனர்.

மேலும், தங்கச் சங்கிலிகள் இரண்டு, ஒரு ஜோடி காதணி, மோதிரங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, பாலமுனைக் களப்பிலிருந்து மடிக்கணினி ஒன்றும் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி சஹ்ரானினுடையது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில், சஹ்ரானின் சகோதரர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தினமன்றே மடிக்கணினி, பணம் ஆகியவற்றைத் தான் பெற்றுக்கொண்டதாகக் சியாம் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் சகோதரன் ரிழ்வான் இந்த மடிக்கணினியைக் கொடுத்து மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு தன்னிடம் கூறியதாகவும் சியாம் வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த மடிக்கணினியை சஹ்ரான் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சஹ்ரான் தலைமையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தற்கொலைக் குண்டுதாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின்படி இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஊடகப் பொலிஸ் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *