கடைசிப் பந்தில் மலிங்க அபாரம்; கிண்ணத்தை வென்றது ‘மும்பை!’ – இறுதிவரைப் போராடித் தோற்றது ‘சென்னை’

12ஆவது ஐ.பி.எல். தொடர் இறுதிப் போட்டியில், ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மிகவும் பரபரப்பான இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசிப் பந்து வரை, அதிக அளவில் ஓட்டங்களை வாரி வழங்கி அணியின் தோல்விக்குக் காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்க, ஒரே பந்தில் ஹீரோவானார்.

கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ஓட்டம் எடுத்தால் சுப்பர் ஓவருக்குப் போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்க வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்கள் மட்டுமே சென்னை அணி எடுத்ததால் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான டி காக் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தார். மற்றொரு புறம் ரோகித் ஷர்மா பொறுப்புடன் ஆடினார். டி காக் 29 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தகூர் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதைத்தொடர்ந்து சாஹர் வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அதைத்தொடர்ந்து, சூர்யகுமார் 15, இஷான் கிஷண் 23, ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இறுதிவரை ஆடிய பொலார்ட் 41 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 149 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொலார்ட் 41 ஓட்டங்கள் எடுத்தார். சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தகூர் மற்றும் தஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தநிலையில், இரண்டாவது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த சென்னை அணியில் டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் வந்த அம்பத்தி ராயுடு நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் மட்டும் எடுத்து சொதப்பி விட்டுச் சென்றார். இந்த இக்கட்டான தருணத்தில் டோனி எட்டுப் பந்துகளில் 2 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆகிச் சென்றார்.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 62 ஓட்டங்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது பந்துவீசிய மலிங்க ஓட்டங்களை வாரிக்கொடுத்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 20 ஓட்டங்களை சென்னை அணி எடுத்தது. இதனால் இலக்கு சற்று எளிதாகியது. பின்னர் வந்த பும்ரா 4 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து மீண்டும் சென்னையை நெருக்கடிக்குத் தள்ளினார். குருனல் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் வான வேடிக்கை காட்டி இரசிகர்களைக் கொண்டாடச் செய்தார். இந்த ஓவரிலும் மட்டும் சென்னை அணி 20 ஓட்டங்களை எடுத்தது. வாட்சன் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்தார்.

இதனால் 12 பந்துகளுக்கு 18 ஓட்டங்கள் என்ற நிலை வந்தது. அடுத்த ஓவரில் பும்ரா வீசிய பந்தில் 15 ஓட்டங்களுடன் பிரவோ வெளியேறினார்.

கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. கடைசி ஓவரில் மலிங்க பந்து வீசினார்.

19 ஓவரில் நான்காவது பந்தில் வாட்சன் 80 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். சென்னை இரசிகர்கள் தலையில் கைவைத்தனர்.

பின்னர் 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் வெற்றி என்றானது. அடுத்த பந்தில் 2 ஓட்டங்களை ஷரதுல் தாக்கூர் அடிக்க, கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், மலிங்க வீசிய அந்தப் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது. சென்னை இரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *