சென்னை – மும்பை இன்றிரவு பலப்பரீட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை அணிகள் இன்று இரவு மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் மல்லுகட்டுகின்றன.

ஐ.பி.எல்.-ல் எப்போதும் சென்னை-மும்பை இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில் இந்த ஆட்டமும் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

வயதான வீரர்களை கொண்ட சீனியர் அணி என்று சென்னை சூப்பர் கிங்சை விமர்சித்தாலும், அனுபவத்தின் மூலம் எதிரணியை புரட்டிவிடுகிறார்கள்.

டோனியின் கேப்டன்ஷிப்பும், வாட்சன், ரெய்னா, பிராவோ, உள்ளிட்டோரின் பேட்டிங்கும், ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழல் ஜாலமும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கிறது.

முந்தைய ஆட்டத்தில் டோனி 75 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.

மொத்தத்தில் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் சென்னை வீரர்கள் தயாராக உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (பெங்களூருவுக்கு எதிராக) 2-ல் தோல்வியும் (டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) சந்தித்துள்ளது.

மும்பை அணி பார்க்க பலமானதாக தெரிந்தாலும் இன்னும் ஒருங்கிணைந்த ஆட்டம் வெளியாகவில்லை.

பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகிறார்கள்.

அதை சரிகட்ட கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வேகப்பந்து வீச்சில் பும்ரா மிரட்டினாலும் அவருக்கு மற்ற பவுலர்களும் துணை நிற்க வேண்டியது அவசியமாகும்.

சொந்த ஊரில் ஆடுவது மும்பை அணிக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். இங்கு நடந்த ஒரு ஆட்டத்தில் டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் சென்னையும், 13-ல் மும்பையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *