முதல் முறையாக உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத தேனீ

அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய இராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கையின் கட்டைவிரலுக்கு ஒத்த பெரியதொரு ரட்சத தேனீ, இந்தோனீசிய தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் இதுவரை மிக குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

சில நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், உயிரோடு ஒரு பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்த வனவிலங்கு நிபுணர்கள், அதனை புகைப்படம் எடுத்து, காணொளி பதிவும் செய்துள்ளனர்.

‘வாலேஸ்’ ரட்சத தேனீ’ என்று இது அறியப்படுகிறது. 1858ம் ஆண்டு இதனை பற்றி விளக்கமளித்த பிரிட்டிஷ் இயற்கை மற்றும் ஆய்வாளர் ஆப்ஃபிரெட் ருசெல் வாலஸின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இந்தோனீசியாவின் மூன்று தீவுகளில் இந்த பூச்சி பற்றிய பல்வேறு மாதிரிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு ஆன்லைனில் இரண்டு தேனீக்களின் மாதிரிகள் விற்கப்பட்டுள்ளபோதும், இந்த தேனீ உயிரோடு இருப்பதை யாரும் பார்த்திருக்கவில்லை.

வாலேஸின் அடிச்சுவட்டை பின்பற்றிய விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஜனவரி மாதம் இந்தோனீசியாவில் இந்த ராட்சத தேனீயை கண்டுபிடித்து புகைப்படம் எடுக்க ஆய்வுப்பயணம் மேற்கொண்டது.

“இதற்கு முன்னால் உயிரிரோடு இருந்ததாக உறுதியாக சொல்ல முடியாமல் இருந்த ‘துணிச்சலான பெரியதொரு பறக்கும் நாய்’ போன்றதொரு ராட்சத பூச்சி எங்கள் முன்னால் தலைக்கு மேலே பறந்து செல்வதை காட்டில் நேரில் பார்த்தபோது,

பெரும் ஆச்சரியமடைந்தோம்” என்று இந்த தேனீ இனங்கள் பற்றிய முதலாவது புகைப்படங்களையும், காணொளிகளையும் எடுத்த இயற்கை வரலாறு புகைப்படக்கலைஞர் கிளே போல்ட் தெரிவிக்கிறார்.

“வாழ்க்கையில் அழகான, பெரிய இன தேனீயை பார்ப்பதும், எனது தலைக்கு மேலே அதனுடைய ராட்சத இறக்கைகளை அடித்து பறந்து செல்லும்போது உருவான ஒலியை கேட்டதும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி” என்கிறார் அவர்.

வாலேஸ் ரட்சத தேனீயின் சிறப்புகள்

  • இதனுடைய இறக்கைள் இரண்டரை அங்குல நீளமுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக பெரிய தேனீ வாலேஸ் ராட்சத தேனீதான்.
  • இந்த இனத்தின் பெண் தேனீ அதனுடைய நீளமான பெரிய தாடையை பயன்படுத்தி மரத்தில் இருந்து ஒட்டுகின்ற பிசினை சேகரித்து புற்று போன்றதொரு கூடு கட்டி, தங்களை ஆக்கிரமிக்க வரும் கரையான்களிடம் இருந்து பாதுகாத்து கொள்கிறது.
  • பிசினை எடுப்பதற்கு தாழ்வான காடுகளை முக்கியமாக நம்பியிருக்கும் இந்த தேனீ இனம், கூடுகளை கட்டுவதற்கு மரத்தில் வாழும் கரையான்களை நம்பியுள்ளது.
  • சார்லஸ் டார்வினோடு சேர்ந்து பரிணாம கொள்கையை வளர்த்த வாலேஸ், நீண்ட அலகுடைய குழவி போன்ற பூச்சி என்று இதனை விளக்கியிருந்தார். இதற்கு மான் வண்டு (ஸ்டாக் வண்டு) போன்று பெரிய தாடை காணப்படுகிறது.

உலக அளவில் அழிந்துபோன இனங்கள் பற்றிய ஆய்வை தொடங்கியுள்ள உலக வன உயிரினங்களின் பாதுகாப்பு என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு இந்த ராட்சத தேனீயை கண்டுப்பிடிப்பதற்கான பயணத்திற்கு நிதி ஆதரவு வழங்கியது.

மறந்துவிட்ட உயிரினமாக மட்டுமே தகவல்களை அமைதியாக சேகரிக்காமல், உலகிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய தேனீ இனமாக இதனை உருவாக்குவதன் மூலம், இந்த தேனீ இனத்திற்கு சிறந்த எதிர்காலம் உருவாகலாம் என்று ராபின் மோர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு ஆண் தவளை மட்டுமே உலகில் எஞ்சியிருப்பதாக நம்பப்படும் தவளை இனத்தை சேர்ந்த, பொலிவிய தவளைகள் பலவற்றை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *