EastLead NewsLocal

கிண்ணியா ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு! – பொதுமக்களின் தாக்குதலில் 12 கடற்படையினர் காயம்

திருகோணமலை, கிண்ணியா ஆற்றில் குதித்து காணாமல்போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (29) காலை  சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் கைது செய்வதற்காக சென்றதையடுத்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பீதி அடைந்து, ஆற்றில் பாய்ந்த மூவரில் ஒருவர் தப்பியுள்ளதோடு, மற்றைய இருவரும் காணாமல் போன நிலையில் அவர்களை இன்று காலை முதல் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று (29) இரவு 7.30 மணியளவில் குறித்த இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் முகம்மது பாரிஸ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல்போன இரண்டாம் நபரைத் தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்களும் கடற்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து பாலாறு பாலத்துக்கு அண்மையில் கடற்படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கல் வீச்சுத் தாக்குதலில் 12 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading