புதிய அரசமைப்பு நிறைவேறிவிடுமோ என்று ராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு!

“புதிய அரசமைப்பு நிறைவேறிவிடுமோ என்று ராஜபக்‌ஷவின் சகாக்கள் சிலர் இங்கே அங்கலாய்ப்புடன் இருக்கிறார்கள்.”

– இவ்வாறு நேற்று வடமராட்சி – பருத்தித்துறையில் நடந்த தனது பாராட்டு விழாவில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

“புதிய அரசமைப்பு நிறைவேறிவிடுமோ என்று அங்கலாய்க்கும் ஒரு கூட்டம் இரண்டு சாரார்களிலும் இருக்கிறது. வரைவு வராது, இனி எங்கே வரப்போகிறது என்றெல்லாம் பரிகாசம் பண்ணினார்கள். வரைவு வந்துவிட்டது.

வந்த வரைவை ஒருவரும் படித்ததாக இல்லை. நாடாளுமன்ற இணையத்தளத்திலே அந்த வரைவு மூன்று மொழிகளிலும் இருக்கிறது. எவரும் படிக்கலாம். நான் ஊரூராகச் சொல்வது அதில் உள்ளதா என்பதைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

அதைப் படித்துப் பார்ப்பதை விட்டுவிட்டு ரணில் என்ன சொல்கிறார், கிரியெல்ல என்ன சொல்கிறார், ராஜபக்‌ஷ என்ன சொல்கிறார், பீடாதிபதிகள் என்ன சொல்கிறார்கள்?. அதைத் தான் எழுதிக்கொண்டிருக்கின்றன பத்திரிகைகள். வரைவில் என்ன உள்ளது என்பதை எழுத விருப்பமில்லை.

இந்த வரைவில் உள்ள விடயத்தைப் பற்றி வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பல இடங்களில் பல கருத்தரங்குகளில் பேசியிருந்தார். அவர் சொன்ன ஒரு கருத்து, இதில் ஒற்றையாட்சி இல்லை. ஒற்றையாட்சி என்று நாங்கள் வரைவிலக்கணப்படுத்துகின்ற ஆட்சி முறை இதில் இல்லை. இதில் சமஷ்டிக் குணாதிசயங்கள் உண்டு என்று தெளிவாகச் சொன்ன ஒருவர். நான் சொன்ன அதே கருத்தை அவரும் சொல்லியிருந்தார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையின் தலைப்புச் செய்தி சிவப்பு நிறத்தில் போடப்பட்டிருந்தது.

அதில், புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே தான் என தவராசா விளக்கம் என்று சொல்லப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது தவராசா திடிரென மனம் மாறிவிட்டாரோ என்று எனக்குப் பெரிய குழப்பமாக இருந்தது.

ஏனென்றால் டக்ளஸ் தேவானந்தா திரும்ப அமைச்சராக வந்தவுடனே ஓடிச் சென்று அவருடன் நின்றவர். ஆகையால் அவரும் நிலைப்பாட்டை மாற்றிவிட்டாரோ என்று யோசித்து நான் அதனைப் படித்துப் பார்த்தேன்.

அவ்வாறு படித்துப் பார்த்தால் தவராசாவின் அறிக்கையிலே அப்படியில்லை. தவராசா திரும்பவும் அதனைத் தான் சொல்லியிருக்கின்றார்.

அதாவது, இதில் ஒற்றையாட்சி இல்லை. சமஷ்டிக் குணாதிசயங்கள் இந்த வரைவில் இருக்கிறதென்றுதான் கூறியிருக்கின்றார். அப்படிச் சொன்னவர், ரணில் விக்கிரமசிங்க இது ஒற்றையாட்சிதான் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றாரே என்பதையும் சொல்லியிருக்கின்றார்.

இந்த வரைவில் இது ஒற்றையாட்சி இல்லை. இதிலே சமஷ்டிக் குணாதிசயங்கள் இருக்கிறது என்று தான் சொல்லியிருக்கின்றார்.

ஆகவே, அந்தப் பத்திரிகை என்ன செய்திருக்கவேண்டும். இந்தத் தலைப்பு தவராசாவின் கூற்று இல்லையே. அது ரணில் விக்கிரமசிங்க சொன்ன கூற்றுத் தானே.

ஆனால், தவராசா விளக்கம் என்று பொய்யான தகவலை வேண்டுமென்றே பிரசுரித்திருக்கிறது. வேண்டுமென்றே-தெரிந்துகொண்டே இவ்வாறான பொய்யான தலையங்கத்தை எழுதியிருக்கின்றனர்.

ஏனென்றால் இது நடந்து விடுமோ என்ற அங்கலாய்ப்புத் தான். அந்த அங்கலாய்ப்பு ராஜபக்‌ஷவுக்குத் தான் இருக்கிறது. அந்த அங்கலாய்ப்பு அவருடைய சகாக்களுக்கும் இங்கே சிலருக்கு இருந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது நடந்துவிடுமோ என்று அங்கலாய்க்கின்றவர்கள். தெற்கிலேயும் கூட மிக மோசமாக பொய்யான பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தெற்கிலும் கூட ஊடகங்கள் மிக மோசமாகப் பொய்யான பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதில் பிரதானமாகச் செய்வது சில தொலைக்காட்சி ஊடகங்கள் தான். அவர்கள் தான் பொய் பரப்புரைகளைச் செய்கின்றார்கள்.

ஏனென்றால் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 44 அல்லது 45 நிமிடங்கள் பேசிய பேச்சில் அதில் ஏழு அல்லது எட்டு நிமிடம் நாங்கள் தனிநாட்டுக் கனவை இனிமேல் கொண்டிருக்கக்கூடாது என்று நான் பேசியிருந்தேன். பலர் பேசப் பயப்பிடும் விடயத்தை அன்று நான் பேசியிருந்தேன்.

தனிநாட்டுக் கனவை இனியும் நாங்கள் கொண்டிருக்கக்கூடாது. ஒருமித்த நாட்டுக்குள் தீர்வைக் காணவேண்டும். அதில் நாங்கள் உண்மையாக இருக்கவேண்டுமென்று பேசியிருந்தேன்.

ஆனால், அன்றைக்குச் சிங்களத் தொலைக்காட்சிகளிலில் தனிநாடு உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று சுமந்திரன் சொன்னார் எனத் தலையங்கமாகச் செய்தியைப் போட்டனர்.

அதை வைத்துக் கொண்டு பெரிய பரப்புரை இப்போது. அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல அதனை எடுத்துக் கொண்டு சிங்களப் பத்திரிகைகள் சுமந்திரன் இவ்வாறு வடக்கில் சொல்லியுள்ளார் என்று செய்திகளை வெளியிடுவார்கள். அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை வெளியிடுவதான செய்தி தான்.

ஆனால், நான் தெட்டத் தெளிவாக எதைச் சொன்னேனோ அதற்கு நேர் எதிரான கருத்தை அந்த ஊடகம் பரப்பிக் கொண்டிருக்கின்றது. அதே நாள் 12 ஆம் திகதி கோப்பாயில் நடந்த ஒரு கூட்டத்தில் நானும் அண்ணன் மாவை சேனாதிராசாவும் அதிலே பேசியிருந்தோம்.

நாங்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றபோது பலர் பல கேள்விகளைக் கேட்டார்கள்.

நாங்கள் நிபந்தனை எதனையும் விதிக்கவில்லை. பல பேச்சுக்களை நடத்தியிருந்தோம். சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அதில் ஒரு விடயம் என்னவெனில், கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் அரசுடன் இணங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளை வடக்கு – கிழக்கு தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பல தீர்மானங்கள் எங்களோடு கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டன.

நாங்கள் அதனைப் பற்றி முறைப்பட்டுக் கொண்டிருந்தோம். குறை கூறிக் கொண்டிருந்தோம். நாங்கள் தான் மக்கள் ஆணை பெற்று தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நாங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகிறோம். எங்களுடன் கலந்தாலோசித்து அதனைச் செய்யுங்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால், அவ்வாறு செய்யாமல் அமைச்சரவை தீர்மானித்துவிட்டது என்று கூறினார்கள்.

ஆகவே, இந்தத் தடவை அவர்களுடன் நாங்கள் பேசுகின்றபோது அமைச்சரவையில் தீர்மானிப்பதற்கு முன்னர் எங்களுடன் கலந்து பேசுங்கள் என்று கேட்டோம். அதில் என்ன தவறு இருக்கின்றது. அந்தப் பிரதேசத்தின் பிரதிநிதிகள் நாங்கள். வடக்கு – கிழக்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிலே 16 பேர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருந்து தப்பித் தவறி உள்ளே வந்தவர்கள்.

முழுமையாக வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எங்கள் கட்சி தான். ஆகவே, எங்களோடு பேசாமல் ஏன் அமைச்சரவையில் தீர்மானங்களை எடுக்கின்றீர்கள் என்று கேட்டிருந்தோம். ஆகவே, இனிமேல் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாக நிச்சயமாக உங்களுடன் பேசி முடிவெடுப்போம் என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

இப்படியான இணக்கப்பாடு இருக்கின்றதென்று அதனை அண்ணண் மாவை சேனாதிராஜா தெளிவாகச் சொல்லியிருந்தார். ஆனால், இன்றைய ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்று மற்றும் அதன் சகோதரப் பத்திரிகையான சிங்களச் செய்தித் தாள் ஆகியன முதற் பக்கத்தில் ஒரு பக்கம் அண்ணண் மாவை சேனாதிராசா மறுபக்கத்தில் நான் கம்பீரமாக நடந்து வருவது போன்ற படத்தை எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். அந்தப் பத்திரிகையின் அரைவாசி முதற் பக்கத்தையே எங்களைக் கொண்டு நிரப்பியிருக்கின்றார்கள்.

அதில் எங்களைக் கேட்காமல் அமைச்சரவையிலே ஒரு தீர்மானமும் எடுக்கமுடியாது என்று நாங்கள் அரசுக்குச் சொல்லியுள்ளோம் என்று செய்தி போட்டிருக்கிறார்கள். இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டமைப்பினதும் டீல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். இது தான் நடக்கின்றது. நடந்தும் கொண்டிருக்கின்றது.

வடக்கு அபிவிருத்திக்கான அமைச்சு பிரதமரின் கையில் இருக்கின்றது. அதே நேரம் கிழக்கில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் கேட்கின்றனர் ஏன் எங்களைக் கைவிட்டுவிட்டிர்கள் என்று. அது குறித்து பிரதமரிடம் கேட்டபோது அது தவறுதலாக நடந்துவிட்டது என்று பிரதமர் சொல்லியிருக்கிறார். அடுத்த முறை அமைச்சரவைப் பெயர் மாற்றும்போது கிழக்கு அபிவிருத்திப் பெயரும் சேரும் என்றும் சொல்லியிருந்தார்.

நான் அதைச் சொன்னேன். ஏனென்றால் கிழக்குத் தமிழ் மக்கள் வடக்குக்கு மட்டும் தானா என்ற அங்கலாய்ப்புடன் இருக்கின்றார்கள். அதனையும் நான் அந்தக் கூட்டத்தில் சொல்லியிருந்தேன். ஆனால், வடக்கும் கிழக்கும் இணையப் போகிறதாம் என்று செய்தி வந்திருக்கின்றது. தெற்கிலே இது நடந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும் முயற்சி நடக்கின்றது.

இங்கு தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களிடத்தில் இன்று நானும் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அதாவது ஒற்றையாட்சிதான் என்று எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்தானே. அவ்வாறாயின் மஹிந்த ராஜபக்‌ஷ சொல்வதை ஏன் நம்பாமல் இருக்கின்றீர்கள்? தனிநாட்டுக்கு அடித்தளம், நாடு பிளவுபடப் போகின்றது, சமஷ்டி அரசமைப்பு தான் என்று மஹிந்த சொல்கின்றார். அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி இல்லை இல்லை, அது ஒற்றையாட்சி தான் என்கின்றார்.

அவ்வாறு அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் மக்களைச் சமாதானப் படுத்துவதற்காக அல்லது மக்களை உசுப்பேத்துவதற்காக ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் உண்மை எது எனக் கண்டுபிடிப்பதற்கு கஸ்டம் கிடையாதே.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே யாழ் நகரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நடந்த விவாதத்தில் சமஷ்டி என்ற சொற் பிரயோகம் இருக்காது. ஆனால், சமஷ்டியின் முக்கிய குணாதியங்கள் வருவதற்கு நாங்கள் முயற்சிப்போம் என்று நான் சொல்லியிருந்தேன்.

அதேபோலத் தான் இடைக்கால அறிக்கையும் வந்திருக்கிறது. நாங்கள் பொய்களைச் சொல்லவில்லை. ஆனால், வெவ்வெறு அரசியல்வாதிகள் வெவ்வேறு பொய்களைச் சொல்கின்றார்கள். அதுதான் சகஜம் என்று பார்த்தால் அரசியல்வாதிகளை விட மோசமாக அரசியல் செய்பவர்கள் ஊடகங்கள்தான். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இருக்கின்றது. அதனால் தான் கறுப்பு ஊடகங்கள் என்று சொல்லப்படுகின்றன.

குறிப்பாக ஒரு ஊடக நிறுவனம் அரசயில் தீர்வு வரக் கூடாதென்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு தொடர்ச்சியாகச் செய்யும் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராக முடிவு கட்டப்படும். அது இப்போது நாட்டுக்குத் தெரிந்திருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *