‘கூட்டு ஒப்பந்தம் தோல்வி!’ – மாற்றி யோசிக்குமாறு வேலுகுமார் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்.” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

எனவே, இலக்கங்களில் தொங்கியிருக்காது, மத்திய அரசாங்கத்தின் தலையீட்டையும் உள்வாங்கும் வகையில் கொள்கை ரீதியிலான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே மலையக சிவில் அமைப்புகள் போராட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டுஒப்பந்த முறைமை தோல்வி  கண்டுள்ளது ஏன்?’ என்ற தொனிப்பொருளின் கீழ் கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மேலுகுமார் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
‘’ பெருந்தோட்டக் கம்பனிகள் தனியார் நிறுவனங்களுக்கு 90 காலப்பகுதியில் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னரே கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அதை மீளாய்வுக்குட்படுத்தி வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதர நலன்புரி சேவைகளும் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே கூட்டு ஒப்பந்த முறைமை உருவாக்கப்பட்டது. சிறப்பானதொரு சம்பள நிர்ணய முறையாகவும் உலகநாடுகளால் கூட்டு ஒப்பந்த முறை கருதப்படுகின்றது. எனினும், அது இலங்கையில் ஏன் தோல்வி கண்டுள்ளது?
கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஆரம்ப காலம் முதலே குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு, தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் தற்போது அடிப்படைச் சம்பளமானது ஆயிரத்தை தாண்டியிருக்கும்.
எனினும், இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சொற்பளவு சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக வருடமொன்றுக்கு 5 தொடக்கம் 10 சதவீதமே சம்பள உயர்வு கிடைத்துள்ளது. இது பெரும் அநீதியாகும். இதை ஆட்சியிலிருந்து அரசாங்கங்களும் கண்டுகொள்ளவில்லை.
அன்றே கூட்டு ஒப்பந்தத்தில் மூன்றாம் தரப்பாக அரசு தலையிட்டிருந்தால், வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்களை வழங்கியிருந்தால் கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட சூத்திரமாக மாறியிருக்காது. தோட்டத் தொழிலாளர்களுக்கும் நீதியின் நிவாரணம் கிடைத்திருக்கும்.
அத்துடன், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள சம்பளம் என்ற பிரதான விடயத்தை மாத்திரமே அனைவரும் தூக்கி பிடிக்கின்றனர். இதர நலன்புரி விடயங்களை கருத்திற்கொள்வதில்லை. இதனால், அவை பெருந்தோட்டக் கம்பனிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இன்று கூட்டுஒப்பந்த முறையானது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.  அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட வேண்டும். மூன்றாம் தரப்பாக அரசாங்கத்தின் தலையீடும் இருக்கவேண்டும்.
பொறுப்பு வாய்ந்த நிறுவனமொன்றின் ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது,  கொள்கை ரீதியிலான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தியே எமது போராட்டங்கள் நகர வேண்டும். மாறாக ஒரே புள்ளியில் இருந்துக் கொண்டு இலக்கங்களை  தூக்கிப்பிடித்து சமராடினால் அவை பயனற்றவையாகவே அமையும். எனவே, அனைவரும் மாற்றி யோசிக்கவேண்டும். அதுவே சமூக மாற்றத்துக்கான பயணமாக  இருக்கவேண்டும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *