கனடாவில் அற்புதம்! மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு!!

கனடா நாட்டில் மிகப் பெரிய வைரம் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோழி முட்டை அளவிலான இந்த வைரம், கனடாவில் பனியால் உறைந்த வடமேற்குப் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

வடஅமெரிக்க நாடுகளில் இவ்வளவு பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

மஞ்சள் நிறம் உடைய இந்த 552 கரட் வைரம், வடமேற்குப் பிரதேசத்தில் உள்ள டியாவிக் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய வைரத்தைவிட இது மூன்று மடங்கு பெரியதாகும்.

கனடாவின் டியாவிக், எக்காட்டி சுரங்கங்களில் மிக உயர்ந்த தரமுடைய வைரங்கள் கிடைப்பது வழக்கமானதுதான் என்றாலும், தென்ஆப்பிரிக்கச் சுரங்கங்களில் கிடைப்பது போன்று பெரிய வைரங்கள் இங்கு கிடைப்பதில்லை.

இது நகை செய்யத் தகுதியான அழகான வைரம் என்று தெரிவித்துள்ள நிபுணர் ஒருவர், சுரங்கம் தோண்டும்போது அது உடையாமல், முழுமையாக பத்திரமாகக் கிடைத்ததே பெரிய அற்புதம் என்கிறார்.

உலகின் இந்தப் பகுதியில் இவ்வளவு பெரிய வைரம் கிடைப்பது வெகு அபூர்வம் என்பதால், இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்கிறார் அவர்.

கனடாவின் பனி உறைந்த வடமேற்குப் பகுதியில் சுரங்கம் தோண்டுவதே மிகவும் கடினம். காரணம், நிரந்தரமான வீதிகள் இல்லாத இப்பகுதிக்கு ஆகாய மார்க்கமாகத்தான் செல்ல முடியும். அதுவும் ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே அங்கு செல்ல இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *