பஞ்சப்படி போராட்டம் – 1966!

 தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக (basic salary) ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.
 
சத்தியாக்கிரகப் போராட்டம், சாலைமறியல் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம், சுழற்சி முறையிலான வேலைநிறுத்தப் போராட்டம் என பல வகையான போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
 
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்குரலுக்கு – போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தலைநகரில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திலும் மலையக இளைஞர்கள் இறங்கினர். எனினும், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் பச்சைக்கொடி காட்ட மறுத்துவருகின்றது.
 
ஆயிரம் ரூபா என்ற ‘தேர்தல் குண்டை’ போட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இது விடயத்தில் ‘மதில்மேல் பூனை’ போலவே செயற்பட்டுவருகின்றது.
 
இன்று மட்டுமல்ல காலத்திற்கு காலம் போராடியே சம்பள உயர்வை பெறவேண்டிய நிலை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சப்படி போராட்டம்மீது பார்வையை செலுத்துவோம்.
 
ரூ. 17.50
பஞ்சப்படி போராட்டம் -1966
 
1966 ஆம் ஆண்டில் சுமார் 45 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற இப்போராட்டமானது முழு இலங்கையையுமே கதிகலங்க வைத்தது எனலாம்.
 
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்துச்சென்று, இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கிய மறைந்த தலைவர் அப்துல் அஸீஸே போராட்டத்துக்கான அறைகூவலை விடுத்திருந்தார்.
 
வாழ்க்கைச்சுமை அதிகரித்திருந்ததால் அக்காலப்பகுதியில் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச்சுமைக்கேற்ப 17.50 ரூபா கொடு க்கபனவு வழங்கப்பட வேண்டும் என அஸீஸ் வலியுறுத்தினார். ( இதுவே 17.50 பஞ்சப்படி என அழைக்கப்பட்டது.)
 
இதன்படி நாளொன்றுக்கு 67 சதம் சம்பள உயர்வுகோரி, சம்பள நிர்ணயச் சபையில் பிரேரணையொன்றை முன்வைத்தார் அஸீஸ். இதற்கு முதலாளிமார் சம்மேளனம் போர்க்கொடி தூக்கியது. 
 
இதையடுத்து தொழிற்சங்க போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளர்களும் துணிவுடன் களமிறங்கினர். பல்வேறு அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 45 நாட்களாகப் போராடினர். ( தொழிலாளர்களுக்கு உணவு வழங்ககூட கம்பனிகள் மறுத்தன)எனினும், வீடு வீடாகச்சென்று – களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு உற்சாகமூட்டினார் அஸீஸ்.
 
 
பிரதமராக இருந்த அமரர் . டட்லி சேனாநாயக்கவுக்கும் தொழிலாளர்களின் போராட்டம் பெரும் தலையிடியாக மாறியது. சம்பள நிர்ணயச்சபையின் ஊடாக பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு கூறி நழுவிவிட்டார்.
 
இதன்படி நாளொன்றுக்கு 25 சதம் சம்பள உயர்வை வழங்குவதற்கு சம்பள நிர்ணயச்சபை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர். எனினும், முதலாளிமார் சம்மேளனமும், இ.தொ.காவும் இணைந்து இத்திட்டத்தை முறியடித்தன.
 
நாளொன்றுக்கு ஒரு ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால், வெறும் 10 சத்தையே நாளொன்றுக்கு சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்க முடிந்தது.
 
இதனால், 1966 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுமுக்கியத்துவமிக்க போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.எனவே, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களும் இவ்வாறு தோல்வியில் முடிவடையக்கூடாது.
 
 
( பஞ்சப்படி போராட்டம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருந்தால் பகிரவும். பிழைகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.)
 
 
எழுத்து எஸ். பிரதா
 
மூலம் – மனிதருள் மாணிக்கம் அப்துல் அஸீல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *