பாரிய சவாலை மிகவும் பொறுமையுடன் ஏற்றுள்ளேன் – விளையாட்டுத்துறையை முன்னேற்ற கைகோர்க்குமாறு ஹரீன் அழைப்பு!

மலர்ந்துள்ள புத்தாண்டில்  கட்சி, நிற, பேதங்களை மறந்து விளையாட்டுத்துறையை முன்னேற்ற முன்வருமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அறைகூவல் விடுத்தார்.
விளையாட்டுத்துறையை, அனைவரது  உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் மற்றும் நெருக்கமான  ஆண்டாக மாற்றுவேன் என்றும்,  அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பெருமிதம் அடைந்தார்.
 உதயமாகியுள்ள புத்தாண்டில், விளையாட்டுத்துறை அமைச்சின் பணிகளை, இன்று (01) காலை  முதன்முதலாக ஆரம்பித்து வைக்கும் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் மேலும் பேசும்போது,
   சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். விளையாட்டுத்துறையில் பல்வேறு சவால்கள் உள்ளன.இந்த ஆண்டில், விளையாட்டுத்துறையின் சவால்களை முறியடிப்பேன்.
விளையாட்டுத்துறை அமைச்சை, மிகவும் இக்கட்டான ஒரு சமயத்தில் பொறுப்பேன். எனினும், அந்தப் பொறுப்பிலிருந்து நான் சற்றும் பின்வாங்காமல், மிகப் பொறுப்புடன் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவேன்.
அரசியல்வாதிகள் ஆவதும், அழிவதும் விளையாட்டுத்துறையின் மூலமே. இப்படியிருந்தும், இப்பாரிய சவாலை நான் மிகவும் பொறுமையுடன் பொறுப்பேற்றுள்ளேன்.
எனவே, இவ்வமைச்சில் கடமை புரியும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தம்மாலான இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குமாறு அன்பொழுக வேண்டிக்கொள்கின்றேன்.
விளையாட்டுத்துறையை, சரியான பாதையில் இட்டுச் சென்றுவிட்டே, நான் இங்கிருந்து விடை பெற்றுச் செல்வேன்.
   மலர்ந்துள்ள இப்புத்தாண்டில், கட்சி, நிறம்,  பேதங்களின்றி நமது பணிகளை உற்சாகத்துடனும், விசுவாசம் நிறைந்ததாகவும் முன்னெடுத்துச் செல்ல, அனைவரும் தம்மை அர்ப்பணித்துச் செயல்பட முன்வர வேண்டும்.
இப்புத்தாண்டிலிருந்து எமது பிழைகளைத் திருத்திக்கொண்டு, சரியான பாதையில் எம்மை இட்டுச் செல்வதற்கும், நாம் தடசங்கற்ப உறுதி பூணுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *