பெரும்பான்மைவாதச் சிந்தனைக்கு நீதித்துறையும் இங்கு விதிவிலக்கல்ல! – சர்வதே சமூகம் உணர வேண்டும் என்கிறார் விக்கி

“ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நீதித்துறை செயற்பட்ட விதத்தை கருத்திலெடுத்து, இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கையின் நீதித்துறை சரியாகச் செயற்படும் என்று சர்வதேச சமூகம் நினைக்கக்கூடாது. இலங்கையின் நீதித்துறையும் இனரீதியான சிந்தனைக்கு உட்பட்டதே.”

– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியால் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதிலும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதிலும் இலங்கையின் உயர்மட்ட நீதித்துறை செயற்பட்ட விதம் மெச்சப்படக்கூடியது; மெச்சுகின்றோம்.

ஆனால், இதனை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விடயங்களில் இலங்கை நீதிமன்றங்களின் ஊடாக நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச சமூகம் சிந்திக்கக்கூடாது.

இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்டதே இனப்படுகொலை.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி என்பது நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு பொதுவான பிரச்சினை. ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை. அங்கே இன ரீதியான பக்கச்சார்பான செயற்பாடுகளுக்கு இடம் இருக்கவில்லை.

இனப்பிரச்சினை விடயத்தைப் பொறுத்தவரையில், இலங்கையின் எல்லா தேசிய நிறுவனங்களுமே இன ரீதியாகப் பிளவடைந்து நிற்கின்றன.

அரசாலும் பெரும்பான்மை இன மக்களாலும் கட்டுப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களில் எமக்கான நீதியை நாம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு நீதித்துறை விதிவிலக்கல்ல.

கொன்று குவித்த இராணுவமே இன்று வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடைகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. தாம் மனிதாபிமான நிறுவனமாக மாறியுள்ளார்கள் என்று ஜெனிவாவில் காட்ட வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு இருக்கலாம். அதற்கு எமது மக்களை அவர்கள் பாவிக்கலாம். ஆனால், அதற்காக எமது மக்கள், எமது மக்கள் அல்ல என்று ஆகி விடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *