வடக்கு அபிவிருத்தி அமைச்சை தந்தால் அரசுடன் இணைவேன்! – டக்ளஸ் நிபந்தனை

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற அமைச்சை மீள வழங்கினால் தேசிய அரசில் இணைவதற்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பியி0ன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

இந்த அமைச்சுக்களை ஏற்றுத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வராமைக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தற்போது வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் அமைச்சுக்களை பிரதமரிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், பிரதமருக்கும் எமது மக்களுக்குமான தொடர்பு என்ன? அவரது கடந்தகாலச் செயற்பாடு என்ன? இந்நிலையில், அந்த அமைச்சு தமிழ் மக்களது உணர்வுகளோடு தொடர்புபட்ட தரப்பினருக்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

ஏன் இந்த அமைச்சைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றிருக்கக் கூடாது ? அவ்வாறு அமைச்சைப் பெற்றுத் தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏன் சேவை செய்ய முன்வந்திருக்கக்கூடாது?

அமைச்சர் மனோ கணேசன் கூறுவதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக்கூடாது ?

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கே அரசுடன் கள்ளத் தொடர்பை வைத்திருக்கவும், தரகுச் செயற்பாட்டை மேற்கொள்ளவுமே விரும்புகின்றது.

தேர்தல் நேரத்தில் மக்களை உசுப்பேற்றுவதும், அவர்களது பிரச்சினையின்போது மெளனமாக இருப்பதுவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாகவுள்ளது” – என்றார்.

கேள்வி:- உங்களையும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கக் கோரினார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்:- தெற்கில் தேசிய அரசு ஒன்றை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு என்னையும் அழைத்தார்கள். ஆனால், நான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற பழைய அமைச்சைத் தந்தால் வருகின்றேன். ஏனெனில் அந்த அமைச்சு ஊடாகவே வடக்கு மக்களுக்குச் சேவை செய்ய முடியும் எனக் கோரினேன். ஆனால், அந்த அமைச்சை எனக்கு வழங்குவது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வேறொரு டீலுக்குக் கேட்டார்கள். நான் ஜனாதிபதியுடன் பேசி விட்டு கூறுகின்றேன் எனத் தெரிவித்துள்ளேன்.

கேள்வி:- வடக்கின் அபிவிருத்தியைச் செய்வதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய அவசியம் என்ன?

பதில்:- ஜனாதிபதியின் சம்மதம் இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. யார் தலைகீழாக நின்றாலும் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை. அவர் வந்தவுடன் அவருடன் பேசி அவர் சம்மதம் தெரிவித்தால் அமைச்சுப் பொறுப்பை ஏற்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *