சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

கண்டி மாவட்டத்தின் முன்னணி உலமாக்களில் ஒருவரான ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும், அவருக்கு மேலான சுவன வாழ்வு கிட்டவேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவரது மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கடந்த மார்ச் மாதம் திகன, அக்குறணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களின்போது பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காடையர் கும்பலினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் மெளலவி காலமான செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சன்மார்க்க அறிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஏ.சி.எம். சதக்கத்துல்லாஹ் மெளலவி பன்முக ஆளுமை கொண்டவர். மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் சன்மார்க்க கல்விகற்ற அன்னார், ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், சன்மார்க்க போதகராகவும், சிட்டி ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் உப தலைவராகவும், காதி நீதிபதியாகவும், சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் பல்வேறு மட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
இனங்களுக்கு மத்தியில் நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்னின்று உழைத்த மர்ஹூம் ஏ.சி.எம். சதக்கத்துல்லாஹ் மெளலவி, இனவாதிகளாளின் ஈனச்செயலுக்கு இலக்காகி தனது இன்னுயிரையே இழக்க நேர்ந்தமை முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்றே கருதவேண்டும்.
அன்னாரின் மறைவினால் துயரமுற்றுள்ள அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், தெல்தோட்டை பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது மறுமை வாழ்வில் மேலான சுவன வாழ்வு கிடைக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *