Lead NewsLocalNorth

தமிழர்களை நிராகரித்தால் ஆட்சியைக் கலைப்போம்! – கூட்டமைப்பு எச்சரிக்கை

எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படும் ஒரு கட்சி. அந்தவகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஓர் ஆதரவைத் தெரிவித்திருக்கமாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அதனை இராஜதந்திர முறையில் அணுக வேண்டும். எங்களது நாட்டிலே, குறிப்பாக வடக்கு – கிழக்கிலே, எங்களுடைய மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதற்கும் அப்பால் அரசியல் தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது எமக்குப் பிரதான தேவையாக இருக்கின்றது. அத்துடன் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பன எங்களது பிரதேசங்களில் மக்கள் கோரிக்கையாக எழுந்திருக்கின்றன. வெறுமனவே பிரதமராக வருகின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து கையைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இருக்காது.

தற்போதைய நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஆதரவளித்திருக்கின்றது. புதிய அரசு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கவேண்டும்.

எனினும், இந்த அரசு எமது மக்களுடைய கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளவில்லையாயின் இந்த அரசுக்கு நாங்கள் கொடுக்கும் ஆதரவை விலக்கிக்கொள்கின்றபோது இந்த அரசு கலைகின்ற அல்லது இல்லாமல் போகின்ற நிலைமை காணப்படும்.

அந்தச் சந்தர்ப்பத்தை நாமும் சரியாகப் பயன்படுத்தாமல் போனால் எமது மக்களுடைய பிரதிநிதிகளாகவோ எமது மக்களுடைய அபிலாஷைகளைத் தீர்க்கின்ற அமைப்பாகவோ இருக்க முடியாது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்” – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading