மீண்(டு)ம் வந்த ரணில்! மைத்திரி ‘ஒப்பரேசன்’ மண்கவ்வியது எப்படி?

விதி சதிசெய்ய, சூழ்ச்சி சுற்றிவளைக்க, துரோகம் படையெடுக்க, சகாக்களும் கைவிரிக்க தோல்வியானது ரணிலின் தோளில் முகாமிடதயாரானது.
தடுமாற்றத்துக்கு மத்தியிலும் தடுத்துநிறுத்த திட்டம் வகுக்கையில் கருப்பாடுகளும் கறுத்தறுப்புசெய்ய தயாரானதால் ரணில் ‘அவுட்’ ஆகி விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, இரவோடிரவாக மஹிந்தவை பிரதமராக நியமித்து இன்பம் கண்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், மஹிந்த – மைத்திரி கூட்டணி திண்டாடியது.
 
எம்.பிக்களை விலைக்குவாங்கியாவது அரியணையேறிவிடவேண்டும் என்பதில் மஹிந்த தரப்பு குறியாக இருந்தது. குதிரைப்பேரமும் உச்சம் தொட்டது. இங்கும், அங்குமாக தாவல்களும் இடம்பெற்றன.இதனால் தெற்கு அரசியல் களம் நாளுக்கு, நாள் சூடுபிடித்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் சம்பவங்களும் அரங்கேறின.
 
அரச பங்காளிக்கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன ரணில் பக்கம் நின்று ஜனநாயகத்துக்காக சமராடின. மேற்படி கட்சிகளை கூறுபோடுவதற்கு வகுப்பட்ட திட்டமும் தோல்விகண்டதால், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி விடுத்தார்.
 
பிரதான எதிர்கட்சியும் ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சிக்கு போர்க்கொடி தூக்கியது. சர்வதேச சமூகமும் கொழும்பு அரசியல்மீது கழுகுப்பார்வையை செலுத்தியதால் அது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
 
மறுபுறத்தில் சபாநாயகர், ஜனநாயகம் படுகுழிக்குள் விழாமல் இருக்கும்வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக பாதுகாப்பு அரண் அமைத்தார். இதனால், ஜனாதிபதியுடன் நேரில் முட்டிமோத வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
 
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதிஏவிய இறுதி அஸ்திரத்தை, உயர்நீதிமன்றம் சவாலுக்குட்படுத்தியது. இறுதியில் அது புஷ்வாணமானது. ஐந்தாவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மைத்திரி வச்ச குறி பிழைத்தது எப்படி?
 
மஹிந்தவை பிரதமராக நியமித்தால், ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களை இலகுவில் வளைத்துவிடலாம் என்பதே மைத்திரியின் திட்டமாக இருந்தது. இதற்காக அவரே நேரில் களமிறங்கினார். ஆரம்பம் என்னவோ அவருக்கு சார்பாக இருந்தாலும் – அடுத்தடுத்தக் கட்டங்கள் பின்னடைவை ஏற்படுத்தின.
 
முஸ்லிம் எம்.பிக்களை இலகுவாக விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அரசியல் சிந்தனையும் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கு மரண அடியாக அமைந்தது.
 
கோட்டா, பஸில் ஆகியோர் களமிறங்கினால், ‘ராஜபக்சக்களுக்கு’ அஞ்சி – அரசியல் எதிர்காலம் கருதி சிலர் நேசக்கரம் நீட்டுவார்கள் என்ற நினைப்பில் வகுக்கப்பட்ட திட்டமும் பிசுபிசுத்தது.
 
அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலையென ஆசைவார்த்தைகளைக்கூறி விரிக்கப்பட்ட வலைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கவில்லை.
 
ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக உடைக்கப்போய், அக்கட்சியை மீண்டும் பலப்படுத்தியுள்ளார் மைத்திரி.
 
( இன்னும் சொல்வேன்)
 
மீண்(டு) ம் வருவதற்காக ரணில் வகுத்த வியூகங்கள் அடுத்த பதிவில் தொடரும்…
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *