மைத்திரியின் எதேச்சதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – ரணிலைப் பிரதமராக்க ஆதரவளிப்போம் என ஹக்கீம் அறைகூவல்

“225 பேர் கையொப்பமிட்டு தந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு இந்த ஜனாதிபதி யார் என்று நாங்கள் கேட்க விரும்புகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதேச்சதிகாரமான இந்த அகங்காரப் பேச்சை நாங்கள் அனுமதிக்க முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க மீது எங்களது எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்காகப் போராடும் இயக்கம் என்ற வகையில் அவரை ஆதரிக்கின்றது. அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாக நியமிப்பதற்கான பிரேரணைக்கு கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முடிவுரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம்,

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்துள்ள இதே சதியைத்தான் அப்போது பிரேமதாஸவுக்கும் செய்தது. மறைந்த தலைவர் அஷ்ரப், பிரேமதாஸவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சதிகளின் அங்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்த சதியின் பின்னால், கடைசியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்துகொள்ள வேண்டுமென தப்புக்கணக்கு போட்டார்கள். அவர்களது சதியின் பங்காளர்களால் நாங்கள் செல்லவில்லை. அதுமாத்திரமல்ல, எங்களுடன் முரண்பட்டிருந்தவர்களையும் அரவணைத்துக்கொண்டு அவர்களின் பக்கம் செல்லாமல் சதிகாரர்களின் வெற்றியை முறியடித்தோம்.

நாங்கள் கொண்டுவந்த 19 ஆவது திருத்தம் தனது சொந்த சுயலாப அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமாக இல்லை என்பது இன்றுதான் சிலருக்கு காலம்கடந்த ஞானமாக உதித்துள்ளது. அதை சரிவர மக்கள் மத்தியில் சொல்லமுடியாமல், தேர்தல் வேண்டும் தேர்தல் வேண்டும் என்ற கோசத்தை மாத்திரமே முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இன்னும் பொறுமையாக இருந்திருந்தால் இந்த பதவி உங்களையே தேடி வந்திருக்கும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாகச் சொன்னேன். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உலகெங்கிலும் இல்லாதவாறு பிரதமரும் அமைச்சரவையும் இல்லையென நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது தாங்கமுடியாத ஒரு அவமானமாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பழிவாங்கியிருக்கிறார் என்பதையிட்டு நாங்கள் ஒருபக்கம் சந்தோசப்படலாம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை கைவிட்டுவிட்டீர்கள் என்று நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக சொன்னேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களை தனது கைக்குள் வைத்திருந்தார். அவர் அண்மையில் பிரதமராக பதவியேற்ற அடுத்த மணிநேரத்தில் தொழிற்சங்கங்கள் அரச ஊடகங்களை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

நாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி, தனது பலவீனங்களை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மீது சொல்கின்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏறெடுத்தும் பார்க்கமுடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அவருடன் இருந்திருக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற்றிருக்க முடியாது.

அதன்பின் ஏற்பட்ட பல முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து இல்லாத, பொல்லாத விடயங்களைச் சொல்லி, கடைசியாக எல்லாவற்றுக்கும் ஆப்பு வைப்பதாகச் சொன்னார். 225 பேர் கையொப்பமிட்டு தந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு இந்த ஜனாதிபதி யார் என்று நாங்கள் கேட்க விரும்புகின்றோம். ஜனாதிபதியின் எதேச்சதிகாரமான இந்த அகங்காரப் பேச்சை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க மீது எங்களது எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்காகப் போராடும் இயக்கம் என்ற வகையில் அவரை ஆதரிக்கின்றது. அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாக நியமிப்பதற்கான பிரேரணைக்கு கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *