ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட்ட நிகழ்வுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு வல்வெட்டித்துறைப் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தனர்.
தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந்த நிகழ்வுக்குப் பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வுகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக அங்கு நின்ற ஊடகவியிலாளர்களைத் தமது கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அத்தோடு அங்கு நின்றிருந்த வாகனங்களின் இலக்கங்களையும் தமது கைத்தொலைபேசிகளில் புகைப்படமெடுத்தனர்.