சதிகாரர்களின் சர்வாதிகாரத்தை சில தினங்களுக்குள் அடக்குவோம்! – ஐ.தே.க. மீண்டும் அரியணை ஏறும் என ரவி திட்டவட்டம்
“சதிகாரர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போலியான ஆட்சியை நடத்தும் மைத்திரி – மஹிந்த அணியினருக்கு சில தினங்களுக்குள் முடிவு கட்டுவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். இது உறுதி.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் மூன்று தடவைகள் போலிப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராகவும், அவர் தலைமையிலான ‘காட்போட்’ அமைச்சரவைக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். 122 எம்.பிக்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளித்தும் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல் மைத்திரியும், மஹிந்தவும் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார்கள். நாட்டு மக்களின் நலனைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் அவர்கள் சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இந்த ஆட்டம் எல்லாவற்றையும் சில தினங்களுக்குள் அடக்குவோம். ஆட்சிப்பீடம் ஏறி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்” என்று ரவி கருணாநாயக்க எம்.பி. மேலும் கூறினார்.