சு.கவை உடைத்துக்கொண்டு 50 பேருடன் மொட்டுடன் இன்று சங்கமித்தார் மஹிந்த!

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார்.

விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கட்சியின் உறுப்புரிமை அட்டையை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி – பொதுஜன முன்னணியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் உறுப்பினர் அட்டைகளை மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.

நாமல் ராஜபக்ஷ, சி.பி.ரத்நாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரசன்ன ரணவீர, சுதர்சனி பெர்னான்டோ புள்ளோ, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, அருந்திக பெர்னான்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ஜானக பண்டார தென்னக்கோன், றோகித அபேகுணவர்த்தன உள்ளிட்ட பலரும் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுமார் 50 வரையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர்.

மஹிந்தவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *