சபரிமலை தரிசனம்- 50 வயதுக்குட்பட்ட 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு
சபரிமலை தரிசனத்திற்கு செல்ல 50 வயதிற்கு உட்பட்ட 500 பெண்கள் ஆன்லைன் வழியே முன்பதிவு செய்துள்ளனர்.

எனினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அடுத்து சபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான புனித யாத்திரை காலம் வருகிற 17ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் 30ந்தேதியில் இருந்து காவல் துறைக்கான ஆன்லைன் வலைதளம் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் இதில் முன்பதிவு செய்துள்ளனர் என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்பொழுது, இதில் நிறைய பெண் பெயர்கள் உள்ளன. அவை உண்மையானவையா அல்லது ஒரே நபரால் பதிவு செய்யப்பட்டவையா என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை.
இந்த வலைதளத்தில் முன்பதிவு செய்வது இலவசம் என்பதனால் பணம் செலுத்த வேண்டியது இல்லை. பணம் செலுத்தினால் கிரெடிட் கார்டு வழியே முன்பதிவு செய்வோரின் அடையாளம் தெரிய வரும் என அவர் கூறினார்.
நிலக்கல்லில் இருந்து பம்பா பகுதிகளுக்கு யாத்திரை செல்வதற்கு அரசு பேருந்து டிக்கெட் இல்லையெனில் இந்த இலவச முன்பதிவு செல்லுபடியாகாது. தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை செல்லவே அனுமதி உள்ளது.
எனினும், முன்பதிவு செய்த 539 பேரும், அரசு பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்று கூறினார். ஆனால் சிலர் நடந்து செல்ல விரும்பினால் அவர்களை பேருந்தில் பயணம் செய்யும்படி வற்புறுத்த முடியாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.