அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் சுமந்திரனுக்கு எதிராகக் கருத்துகள்! – சிவஞானம் சுட்டிக்காட்டு
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரி, பிழை இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்கவேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் சுமந்திரனுக்கு ஆதங்கம் இருப்பது இயற்கையானது தான். ஆனால், அந்த ஆதங்கத்தை நாகரிகமாக அல்லது சில வார்த்தகைளைத் தவிரத்த்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கின்றது. அதேபோன்று சுமந்திரனுடன் இணைந்து அந்த வேலைகளில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். ஆகவே, இவ்வாறு பல வழிகளிலும் செயற்பட்டபோது ஜனாதிபதியின் செயற்பாடுகளைப் பார்க்கையில் ஆதங்கம் ஏற்படுவது இயற்கையானது.
அந்தவகையில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். அதாவது சுமந்திரன் தனது அரசியல் வாழ்க்கையை இனப்பிரச்சனைக்கான தீர்விலும் அரசமைப்பு மாற்றத்திலும் ஈடு வைத்தவர் என்று கூடச் சொல்லாம். ஏனெனில் இது நடைபெறாவிட்டால் அரசியலிலிருந்தே ஒதுங்கிக் கொள்வேன் என்று கூடச் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் அரசமைப்பு முன்னேற்றத்தை நேசித்துச் செயற்பட்ட ஒருவர். அது 7ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் அதனைக் குழப்பும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பது ஏற்றுக் கொள்ளப்படாத விடயம்தான்.
ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடு உணர்ச்சி வசப்படக் கூடிய விடயம் தான். ஆகவே, அந்த அடிப்படையில் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தச் சொற் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்.
கட்சியில் இருந்து சுமந்திரன் நீக்கப்படவேண்டுமென சிவசேனை தலைவர் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவர் ஏற்கனவே கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கின்றார்.
சிவசேனைக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்க தேவையில்லை. அது ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயம் இல்லை. அவருடைய கோரிக்கை கட்சிப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது” – என்றார்.