சாதனைக்காக ஐந்து மாதங்களாக கடலில் நீந்திய இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி. இவர் கடலில் நீண்ட நாட்கள் தொடர்ந்து நீந்தி சாதனை படைக்க விரும்பினார். அதற்காக கடந்த ஜூன் முதலாம் திகதி இங்கிலாந்தில் உள்ள கிரேட் பிரிட்டன் தீவு கடலில் நீந்த தொடங்கினார். தினமும் 6 முதல் 12 மணி நேரம் கடலில் நீந்தியபடி இருந்தார்.

மற்ற நேரங்களில் தனது உதவிக்காக கொண்டு சென்ற படகில் உணவு சாப்பிடவும், தூங்கியும் பொழுதைக் கழித்தார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவணப்படமாக வெளியிட்டார். இதை 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேல் கடலில் நீந்திய ரோஸ் எட்ஜ்லி கடந்த 4 ஆம் திகதி தென் இங்கிலாந்தில் உள்ள மார்கேட் நகரில் கரை திரும்பினார். அப்போது அங்கு கூடி நின்ற மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து கடலில் நீந்தியதால் தனது உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதில் அவரது கால் பாதங்கள் பிரஷ் போன்று கட்டையாக மாறி இருந்தது. பார்ப்பதற்கு அவை மீன் செதில்கள் போன்று காணப்படுகின்றது. கடலில் உப்பு தண்ணீரில் நீந்தியபோது நாக்கு வறண்டு கடும் தாகம் ஏற்பட்டது. உணவு சாப்பிடவும், விழுங்கவும், பேசவும் மிகவும் சிரமப்பட்டார்.

அதைப் போக்க தேங்காய் எண்ணை போன்றவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறினார். இன்னும் 2 வாரத்தில் அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *