அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது இந்தியா!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை 7-வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் புதன்கிழமை அபுதாபியில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பதற்காக இனி எல்லா ஆட்டங்களிலும் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், அஷ்வின் தேர்வாகினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால், இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்க, இன்னிங்ஸை தொடங்கிய கே.எல்.ராகுல் – ரோஹித் சா்மா இணை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பவுண்டரி சிக்ஸா்களாக விளாசியாது. இதனால் 5வது ஓவரிலேயே 50 ஓட்டங்களை எட்டியது இந்தியா.

இதனிடையே ரோஹித் 37 பந்துகளிலும், ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா். முதல் விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சோ்த்த இந்த கூட்டணியை கரீம் ஜனத் 15-வது ஓவரில் பிரித்தாா்.

8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 74 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோஹித், அவரது பந்துவீச்சில் விளாசிய பந்து முகமது நபி கைகளில் பிடிக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட, மறுபுறம் ராகுலும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் குல்பதின் நயிப் வீசிய 17-வது ஓவரில் வெளியேறினார்.

பின்னா் பாண்டியா களம் புகுந்தாா். 20 ஓவா் முடிவில் பந்த் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27, பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இறுதியில் இந்திய அணி, 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் விளாசியது.

இதன்மூலம் இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணியானது இந்தியா.

இதற்கு முன், சார்ஜாவில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 190 ஓட்டங்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கடின இலக்கை விரட்ட ஆப்கானிஸ்தான் அணிகளமிறங்கியது. தொடக்கத்திலேயே முகமது ஷஜாத் (0), ஹஜ்ரதுல்லா ஜஜாய் (13) ஜோடி ஏமாற்றியது.

ஷமி வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் (19) நிலைக்கவில்லை. அஷ்வினின் சுழற்பந்தில் குல்பதின் (18), நஜிபுல்லா ஜத்ரான் (11) சிக்கி வெளியேறினார்.

பின் இணைந்த கேப்டன் முகமது நபி, கரீம் ஜனத் கூட்டணி பொறுப்பாக விளையாடியது. 6வது விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்த போது ஷமியின் வேகப்பந்தில் நபி 35 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரஷித் கான் ‘டக்-அவுட்’ ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜனத் (42), அஷ்ரப் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கட்டை வீழ்த்தினார்.

இமாலய வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *