ஜனாதிபதி செயலகத்திலேயே வண்ணத்துப்பூச்சிகள் – இரட்டை பாலியல் அர்த்தத்தில் ஹிருணிகாவும் பதிலடி!
ஜனாதிபதி செயலகத்தில்தான் வண்ணத்துப்பூச்சிகள் (சமனலயா) இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் முடிவுகளை அமைச்சரவை எடுக்கவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியிருந்த வண்ணத்துப் பூச்சிக் குழுவே எடுத்தது என்றும் இரட்டை பாலியல் அர்த்தத்துடன் கூறியிருந்தார்.
ஒரு பாலுறவாளர்களை சிங்களத்தில், வண்ணத்துப்பூச்சி (சமனல) என்று, கூறப்படும் வழக்கம் உள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். மங்கள சமரவீர ஜனாதிபதியை அட்டை என்றும், சரத்பொன்சேகா பாம்பு என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே ஹிருணிகாவும் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ ஜனாதிபதி செயலகத்திலேயே வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. கடந்தகாலங்களில் நேரில் கண்டுள்ளேன். அந்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. சாட்கிகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தினால் சிக்கல். ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர், தான் ஏன் இப்படி சொன்னேன் என்று கவலைப்படுவார்” என்றும் ஹிருணிகா தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதி இரட்டை பாலியல் அர்த்தத்துடன் மேற்படி கருத்தை வெளியிடவில்லை என்று சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.