வாக்குறுதியிலிருந்து பின்வாங்காது அரசு! – சம்பந்தன் நம்பிக்கை; சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிங்கள புத்திஜீவிகள் ஆகியோரின் எதிர்ப்பையடுத்து புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்று வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கின்றதெனில் அதைக் குழப்பியடிக்க சில கும்பல்களும் இருக்கும். அந்தக் கும்பல்களின் வதந்திக் கருத்துக்களை எவரும் நம்பக்கூடாது. உண்மையை நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அரசு மீண்டும் ஆட்சியமைக்க நாம் வெளியில் இருந்து அதாவது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு ஆதரவளித்தோம். பல கோரிக்கைகளை அரசிடம் நாம் முன்வைத்திருந்தோம். அதில் முக்கியமானதுதான் இந்தப் புதிய அரசமைப்பு. இதைக் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது.

அதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. நம்பிக்கையுடன் நாம் பயணிக்க வேண்டும். அதைக் குழப்பியடிக்கும் விதத்தில் எவரும் செயற்படக்கூடாது.

புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டார். இதை நிறைவேற்றுவதற்கான பணிகளை அவர் தலைமையிலான அரசு முன்னெடுக்கும். நாமும் எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.

புதிய அரசமைப்புத் தொடர்பில் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *