கோடிகளுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம் – வேலுகுமார் எம்.பி. திட்டவட்டம்!

“தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி. கொள்கை அரசியலை உயிர்நாடியாகக் கருதி நேர்வழியில் செல்லும் எமது அரசியல் பயணம் கோடிகளுக்காக திசைமாறாது.” –  என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார்  தெரிவித்தார்.

மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் அனைத்துக்கட்சிகளும் ‘தவளை அரசியல்’ நடத்தும் கட்சிகள் அல்ல என்பதையும், மக்களுக்கான அரசியல் என்றால் என்னவென்பதையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிரூபித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ அரசியலில் ஜனநாயக வழிமுறையே நீதியின் வழியாக – நெறியாக பார்க்கப்படுகின்றது. மாற்றங்களெல்லாம் அந்தகோட்பாட்டின்கீழ்தான் இடம்பெறவேண்டும். அதற்கு அப்பால் நடப்பதெல்லாம் ‘அராஜகம்’ என்றே அர்த்தப்படும்.
இலங்கையிலும் குறுக்கு வழியாக – ஜனநாயகத்துக்கு புறம்பாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும், அவரின் சகாக்களும் முயற்சிக்கின்றனர். அரசமைப்புக்கு முரணான வகையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையும் பொறுப்பேற்றுவருகின்றது. இவையெல்லாம் சட்டவிரோத நடவடிக்கைகளாகும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் என்பதால் சிறுகட்சிகளை துண்டாடும் அரசியலும் நடந்தேறிவருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பிரகாரம், மரியாதை நிமிர்த்தமே தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அவரை சந்தித்து கலந்துரையாடினர். புதிய அரசுக்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி,  மக்கள் நலனை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியென்பதால் ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி செயற்பட்டிருந்தாலோ அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி இருந்தாலோ அது சிறப்பானதாக அமைந்திருக்கும். அதையெல்லாம் செய்யாது இறுதிநேரத்தில் பேரம் பேசும் அரசியல் அவர் முன்னெடுப்பது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும்.
அபிவிருத்தியும் எமது மக்களுக்கு வேண்டும். அதற்கு அப்பால் உரிமைக்காகவும், கொள்கைக்காகவும் மலையக மக்கள் எமக்கு வாக்களித்திருந்தனர். சலுகைகளுக்காக அந்த ஆணையை அடகுவைக்கமுடியாது. எமது தலைவர்கள் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள். ஆட்சிகள் மாறல்லாம், காட்சிகள் மாறலாம். பதவிகள் வரலாம், போகலாம். ஆனால், மக்கள் மனங்களை வெல்வதே சவால்மிக்க செயலாகும்.  அப்படியிருந்தும் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.  அதை தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் தவிடுபொடியாக்காது” என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *