ஈ.பி.டி.பியை விட்டு விலகவில்லை! அவர்களும் என்னை நீக்கவில்லை!! – தவராசா குத்துக்கரணம்

“ஈ.பி.டி.பியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லை” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்தார்.

ஈ.பி.டி.பியில் இருந்து ஒதுங்கியிருக்கும் நீங்கள் மீண்டும் அந்தக் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளீர்கள் என வெளியாகிய செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்திருந்தேன். அவ்வாறு அந்தக் கட்சி உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கட்சிச் செயற்பாடுகளில் முன்னரைப் போன்று கூடுதலாகச் செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

அதற்காக நான் கட்சியிலிருந்து விலகினதாகவோ அல்லது கட்சி என்னை விலக்கியதாகவோ இல்லை. முன்னரைப் போன்று செயற்படவில்லை அவ்வளவுதான். ஆகக் கட்சிச் செயற்பாடுகளில் தொடர்ந்து செயற்பட ஆர்வம் இல்லாத நிலையிலேயே அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தேன்.

ஆனால், இன்று கட்சியின் செயலாளர் நாயகம் மீள்குடியேற்ற, இந்துகலாசார, வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்துள்ள நிலையில் வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு எனது பங்களிப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கைகையை நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளைச் செய்யவேண்டியுள்ளது. அதற்கமைய எனது முடிவுகள் அமையலாம். ஆகவே ஜனாதிபதியின் தீபாவழிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் ஒன்றாகக் கலந்து கொண்டமையால் மீண்டும் இணைந்துவிட்டோம் என்று செய்திகள் வந்திருக்கலாம்.

அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. இருவருக்கும் அந்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *