நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்வதே ஒரே வழி! – ஜனாதிபதியிடம் அதிகாரம் இருக்கின்றது என்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர்

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்குச் சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கின்றது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 70ஆவது சரத்தின்படி நாடாளுமன்றம் நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்கப்பட முடியும் என்று திருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை உடையவர் என்று கூறும் 33ஆவது சரத்து ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டும், ஒத்திவைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்க அரசு 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி கலைக்க முடியாது என்ற வகையில் அறிமுகப்படுத்திய திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நாடாளுமன்றக் கலைப்பு என்பது எப்போதுமே நிறைவேற்று அதிகாரமாக இருந்துள்ளது. அதனை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி இல்லாமலாக்க முடியாது.

எனவே, 33ஆவது சரத்து தற்போதைய 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க வேண்டியதாயிற்று. அல்லாவிட்டால் 19ஆவது திருத்த சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கின்றது. அது தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும். அது மக்களுக்கும் நாட்டுக்கும் தேவைப்படும்போது, ஸ்திரமற்ற நிலையில் உள்ள நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *