அரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்! மைத்திரி – மஹிந்த அணிக்கு சம்பந்தன் சாட்டையடி!!

“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதித்து – அதைப் பின்பற்றி இனியாவது செயற்படுங்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பகல் மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் குழப்பகரமான நிலைமை இருந்து வந்தது. பதவியில் இருந்த பிரதமர் மாற்றப்பட்டார். ஒரு புதிய நபர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அது நடந்த விதம் அரசமைப்புக்கு முரணாக இருந்தது. அத்துடன், புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்த சகல கருமங்களும் அரசமைப்புக்கு மாறாக இருந்தன. கொள்கை அடிப்படையில் இவற்றையெல்லாம் எதிர்ப்பது என எமது கட்சி முடிவெடுத்தது.

அரசமைப்புக்கு முரணான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி கோரி உயர்நீதிமன்றத்துக்கு எமது கட்சி சென்றது. எமது கட்சி சார்பில் முதல் மனுவை நான் தாக்கல் செய்திருந்தேன். நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தலும் ஏனைய விடயங்களும் சட்டத்துக்கு – அரசமைப்புக்கு முரண்பட்டவையாக இருப்பதனால் அவற்றை இடைநிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் முடிவெடுத்தது.

ஜனாதிபதி முதலில் நாடாளுமன்றத்தை இந்த மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார். பின்னர் அவர் மேல் பயன்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நாடாளுமன்றத்தை 14ஆம் திகதிக்கு கூட்ட அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தார். அவருடைய வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதிப்பதற்கு – அதைப் பின்பற்றுவதற்கு எல்லோரும் முன்வரவேண்டும். அது அனைவருடைய கடமை என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *