அட்டையைவிட வண்ணத்துப்பூச்சியை அதிகம் விரும்புகின்றேன்! – மைத்திரிக்கு மங்கள பதிலடி

அட்டையைவிட வண்ணத்துப்பூச்சியை நான் விரும்புகிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

புதிய அரசுக்கு அனாதரவாக கொழும்பில் நேற்று நடந்த பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முடிவுகளை அமைச்சரவை எடுக்கவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியிருந்த வண்ணத்துப் பூச்சிக் குழுவே எடுத்தது என்றும் இரட்டை பாலியல் அர்த்தத்துடன் கூறியிருந்தார்.

ஒரு பாலுறவாளர்களை சிங்களத்தில், வண்ணத்துப்பூச்சி (Samanala) என்று கூறப்படும் வழக்கம் உள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மிகக் கேவலமான வகையில் சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கின்றார் என்று ஊடகவியலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதியின் கருத்துக்கு தனது ‘ருவிட்டர்’ தளப் பதிவு ஒன்றில் மங்கள சமரவீர பதிலடி கொடுத்திருக்கின்றார்.

அதில், “திருவாளர் ஜனாதிபதியே! அட்டையைவிட வண்ணத்துப்பூச்சியை அதிகம் விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், அவர் மறைமுகமாக ஜனாதிபதியை அட்டை என்று வர்ணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *