மஹிந்த அணியின் போராட்டத்தால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை விசேட பாதுகாப்பு!

பாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான றுவான் குணசேகர இன்று மாலை  பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த கூட்டத்திற்கு பெரும்எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 1200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில் ,

தியத்தஉயன மற்றும் பொல்துவ உள்ளிட்ட பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வரும் வாகனங்கள் நாளை நண்பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கொழும்பு மற்றும் கடுவெல அத்துருக்கிரிய மாலபேக்கிடையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வான்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *