முந்தியடித்துக்கொண்டு மஹிந்தவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து – பிரதமர் மோடி மௌனம்!

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதி  ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் , பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வந்தது.

இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக நீக்கினார். உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற மஹிந்தவுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்பு,ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டு தலைவர் ஜி ஜிங்பிங் தான்.

ஏற்கனவே, சீனாவுடன் ராஜபக்ச நெருங்கிய நட்புறவை காட்டுபவர் என்று சர்வதேச அரங்கில் கூறப்படும் நிலையில், அவருக்கு சீன அதிபர் வாழ்த்து கூறியதாக வெளியான தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் இலங்கை விவகாரம் குறித்து இன்னும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *