திகா எந்த முடிவை எடுத்தாலும் அதை ஆதரிக்க தொழிலாளர் தேசிய சங்கம் முடிவு!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான திகாம்பரமும், முன்னணியின் பொதுச்செயலாளரான திலகரும் எடுத்துள்ள முடிவை தொழிலாளர் தேசிய சங்கம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.


எத்தகைய அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இவ்விருவரும் எடுக்கும் முடிவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னணியின் நிதிச் செயலாளருமான எஸ். பிலிப் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் இன்று ஹட்டனில் கூடினர். இக்கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றுகையிலேயே பிலிப் மேற்கண்டவாறு கூறினார்.

“ தலைவர் திகாம்பரமும், பொதுச்செயலாளர் திலகருமே தொழிலாளர் தேசிய சங்கத்தினை எழுச்சிபாதையை நோக்கி அழைத்துச்சென்றனர். எனவே, நெருக்கடினான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் எடுத்துள்ள முடிவை நாம் வரவேற்கவேண்டும். எனவே இன்றைய தீர்க்கமான அரசியல் சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு கட்சியினதும் தொழிற்சங்கத்தினதும் உயர்பீட உறுப்பினர்கள் எமது ஏகமனதான ஆதரவை தெரிவிப்பதுடன் இந்த தகவலை கீழ்மட்டம் வரை கொண்டு செல்லவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் பிரதி நிதி செயலாளர் சோ. ஸ்ரீதரன், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், இளைஞர் அணித் தலைவர் சிவனேசன் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்த சந்திப்பில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்.பொன்னையா, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாதர் அணியினர், தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் பலரும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *