சில தினங்களில் கோட்டாவின் அராஜகம் தலைவிரித்தாடும்! சர்வதேசத்துடன் பேசியே கூட்டமைப்பு முடிவெடுக்கும்!! – மாவை எம்.பி. அதிரடி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இராணுவ ஆட்சிக் கொடுமைகள் என்பன எமக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது. இதனையடுத்து கடந்த ஐனாதிபதித் தேர்தலின்போது எமது மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து அவரை ஐனாதிபதியாக்கினர்.

இதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதும் எமது மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றனர். அதற்கமையவே நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சி நலன்களின் அடிப்படையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருக்கின்றார்.

மைத்திரி – ரணில் கூட்டரசின் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முதலில் அரசமைப்புப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவேண்டியிருக்கின்றது.

அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் படையினர் வசமிருக்கின்ற காணிகளைப் பொதுமக்களிடம் கையளிக்க வேண்டுமென ஜனாதிபதி ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார். ஆனாலும், இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு என்ன நடக்குமென்று எண்ணுகின்றோம்.

அதேபோன்று இன்னும் சில நாட்களில் கோட்டாபய ராஐபக்‌ஷவின் அராஜக நடவடிக்கைகள் பலமடையும். அவருக்கு முக்கியத்துவும் இருக்கும். ஆகவே, இனி அவர் எல்லாம் எவ்வாறு நடக்கப் போகின்றார் என்பதில் எங்களுக்குப் பல நெருக்கடிகள் உள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் அனுசரனையுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கடந்த 2011ஆம் அண்டு முதல் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச சமூகத்துடன் கூட்டமைப்பு இணங்கிச் செயற்பட்டு வருகின்றது. ஆனபடியால் அதனை மனதில் வைத்து அவர்களோடும் இந்தச் சூழல் தொடர்பில் பேசவேண்டும்.

எங்கள் கட்சியுடனும், எமது மக்களுடனும், அயல் நாடு மற்றும் சர்வதேச சமூகங்களுடன் நாம் பேச்சு நடத்தவேண்டும். ஆகவே, இரு வாரங்களில் அத்தகைய பேச்சுக்களை நடத்தி அதன் பின்னர் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு எண்ணியுள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *