விக்கியின் பிரிவு கூட்டமைப்புக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது! – அடித்துக் கூறுகின்றார் துரைராஜசிங்கம்

“தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என அன்று தெரிவித்தார். இன்று தமிழ் மக்கள் கூட்டணிக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார். எனவே, தமிழ் மக்கள் பேரவை அநாதையாக்கப்பட்டுவிட்டதா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்.

“விக்னேஸ்வரனின் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சியை ஆரம்பித்தமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துமளவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஒன்றையும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை. ஏற்கனவே ஒரு சகோதரர் போயிருக்கின்றார். அதுபோன்று இன்று முன்னாள் வடக்கு முதலமைச்சரும் போயிருக்கின்றார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு என்று சொல்ல முடியாது.

அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட அமரர் நவரெட்ணம், கட்சியை விட்டு வெளியேறியபோது அப்போது அதுவோர் அலையாகவே இருந்தது. ஆனால் , காலப்போக்கில் அந்த விடயம் இருந்த இடம் தெரியாமல் போயிவிட்டது.

அதுபோலவே, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனும் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். வினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியை பிரகடனப்படுத்தியுள்ளார், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்மைவிட்டு விலகியும் விலகாமலும் ஏற்கனவே இருக்கின்றார். பெரிய அரசியல் கட்சிகளில் எல்லாம் இவ்வாறு நடப்பது சாதாரண விடயமாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பிரிந்து சென்றவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் என்றும் தயாராகவே இருக்கின்றோம். மக்களும் அவர்களுடன் பேசவேண்டும். நாங்கள் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினோம். மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தினோம்.

விக்னேஸ்வரன் என்பதற்காகவோ, அவரது ஆளுமையை கருத்தில்கொண்டோ நாங்கள் அவரை வலிந்து அரசியலுக்குள் இழுக்கவில்லை. அப்போது பொதுக்கூட்டங்களில் பேசும்போது தமிழர்கள் தொடர்பாக நேரிய சிந்தனையுடன் இருப்பதாக அப்போது வெளிப்படுத்தி வந்தார். அவரது அந்தக் கொள்கை கோட்பாடுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற நீதியரசர் என்கின்ற அந்த உருவம் காரணமாக நாங்கள் கவரப்பட்டோம்.

குறிப்பாக எங்களது மத்திய குழுவில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையை நான்தான் கொண்டுவந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருந்தோம். இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டோம். பாரிய வெற்றியைப் பெற்றார். உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால், தமிழர்களின் வரலாறு இவ்வாறு துன்பங்களை சுமந்தே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இருக்கவேண்டுமோ தெரியவில்லை.

விக்னேஸ்வரன் படிப்படியாக எங்களுடன் ஒத்துழைத்து செல்லாத நிலையே இருந்து வந்தது. அவர் கட்சி சாராதவர் என்று தன்னை கூறினாலும் அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களுக்கு அழைத்தபோதிலும் அவர் ஒரு கூட்டத்துக்கும் வரவில்லை.

விக்னேஸ்வரனின் பிரிவு எமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் எல்லோரும் தமிழ் மக்களின் பிரச்சினையை ஓரணியில் நின்று வென்றெடுக்கும் அவசியத்தை உணர்வார்கள்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

(வா.கிருஷ்ணா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *