விக்கியின் கூட்டணியை வரவேற்கின்றார் டக்ளஸ்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியை வரவேற்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“புதிய, புதிய அரசியல் கட்சிகள் தோன்றுவதன் ஊடாகவே ஜனநாயகம் மேலும் பலப்படும். ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற நிலைப்பாட்டிலே எமது ஈ.பி.டி.பி. கட்சி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று விடுத்த அறிவிப்பு குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எனினும்,புதிய கட்சியினர் தமது சுயலாபங்களை பொதுநோக்கங்களின் பின்னால் மறைக்க முற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“புதிய கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளும் இணைந்துகொள்ளும். இவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாம் இதனை காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை” எனவும் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *