போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது!- யஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, இலங்கை இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியி்ட்டுள்ளார்.

“ ஐ.நா அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கை இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், அவருக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

2009 போரில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை எவரும் இதற்காக பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை.

ஐ.நாவின் இந்த சிறிய நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றோ ஒரு நாள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது என்ற வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கிறது என்பது குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை.

போர்க்குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐ.நாவின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும், இந்த நடவடிக்கை கூறுகிறது.

2009 இல் இடம்பெற்றவைகளில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடுவதற்காக, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளை சிறிலங்கா பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானம் ஒன்றுக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதுடன் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியது.

எனினும், இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை.

2009 இல் லெப்.கேணல் அமுனுபுரவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவீந்திர டி சில்வா தற்போது சிறிலங்கா இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் .

இவரே இலங்கை படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது குறித்து விசாரணை செய்கின்றார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *