பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் தயார்! ஆனால் அதிகாரம் பிரிக்கப்படவேண்டும்!! – சுமந்திரன் திட்டவட்டம்

”நாடு தான் பிரிக்கப்பட முடியாது. ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும். இதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கின்றோம். பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் இணங்கத் தயார். ஆனால் அதற்கான நிபந்தனை ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும். இதை தெற்கில் சிங்களப் பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.”

இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாததும் பிரிக்க முடியாததும், அரசமைப்புத் திருத்தங்களுக்குகான அதிகாரம் நாடாளுமன்றத்திடமும் மக்களிடமும் விடப்பட்டிருக்கிற ஒரு நாடு என்ற வரைவிலக்கணத்தை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒற்றையாட்சியா ஒருமித்த நாடா?” என்ற தலைப்பில் நேற்றுப் பருத்தித்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஒரு என்பதை விட ஒருமித்து என்று சொல்லுகின்றபொழுது அங்கே பல மக்கள் வாழுகின்ற ஒரு நாடு. அவர்கள் ஒருமித்து ஒரு நாடாக இருக்கிறார்கள் என்ற பொருளும் வரலாம். ஏக்கிய என்பதற்கு அந்தச் சொல் சரியானது. ஐக்கியம் வேண்டும். ஏன் என்றால் பலர் இருப்பதால்தான். ஒருவருக்கு ஐக்கியம் தேவைப்படாதே. ஒரு நாடு என்று நீங்கள் சொல்லலாமே என்று அவர்கள் சொன்னதற்கு நாங்கள் சொன்ன பதில் ஏக்கிய ராஜ்ஜிய என்று சொல்லாமல் எக்க ரட்ட என்று சொல்லுங்கள் என்று.

ஒரு நாடு என்று பேச்சுவழக்கில் சொல்வதை அரசமைப்புச் சட்டத்தில் தமிழில் எழுத வேண்டுமென்று சொல்ல வேண்டுமென்றால் சிங்களத்தில் பேச்சு வழக்கில் எக்க ரட்ட என்று சொல்லி விடலாம். இல்லை ஏக்கிய ராஜ்ஜிய என்று சொல்லவேண்டுமாக இருந்தால்-பேச்சுவழக்கில் இல்லாமல் உயர்ந்த மொழி நடையில் சொல்வதாக இருந்தால் நாங்கள் ஒருமித்த நாடு என்று உபயோகிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.
இந்த ஒற்றையாட்சியா ஒருமித்த நாடா என்கின்ற இந்த விவாதத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் ஏக்கிய ராஜ்ஜிய என்று சொன்னால் ஒற்றையாட்சி என்று தான் தலைகீழாக நின்று இன்றைக்கு ஒருவர் விவாதித்துக் கொண்டிருக்கின்றார். அதைச் சொல்லி ஒற்றையாட்சி என்ற சொல்லுத்தான் பாவிக்க வேண்டுமென்றும் கேட்கிறார். கடந்த வழிநடத்தல் குழு கூட்டத்திலும் ஒற்றையாட்சி என்ற சொல்தான் பாவிக்க வேண்டுமென்று கேட்டார்.

வரைவிலக்கணத்தில் நாடு , நாட்டின் ஆட்சி முறை எப்படி என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு இடத்தில் அல்லாமல் மத்தியிலும் மாகாணத்திலும் இருக்கிறதென்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கத்தக்கதாக ஒற்றையாட்சி என்று சொல்ல வேண்டுமென்று எங்களில் ஒருவரையே சொல்ல வைத்திருக்கிறார்கள். ஒற்றையாட்சிதான் வேண்டுமென்று எங்களில் ஒருவரையே சொல்ல வைத்திருப்பதால் யார் சொல்லி நீங்கள் இதனைக் கேட்கின்றீர்கள் என்று சம்மந்தன் ஐயா அவரிடம் கேட்டிருக்கின்றார்.யார் சொன்னதை வந்து இங்க சொல்கின்றீர்கள் என்று சம்பந்தன் கேட்டிருந்தார்.

ஆகவே எங்களுடைய அடிப்படையான அரசியல் அபிலாசை எப்படியானது? இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய உருவாக்கமே அதிலே தங்கியிருக்கின்றது. சமஷ்டி அடிப்படையானது. ஓற்றையாட்சிக்கு நேர் எதிரானது. ஓரிடத்தில் ஆட்சி இருக்க முடியாதென்பதுதான் எங்களுடைய அடிப்படையான கோட்பாடு. அது தான் எங்களுடைய கொள்கை. அந்தக் கொள்கையிலே நாங்கள் இம்மியளவும் விலக மாட்டோம். ஆனபடியினால் தான் நாங்கள் இதுகாலவரைக்கும் தெளிவாக ஒற்றையாட்சி என்று இரண்டு அரசமைப்புச் சட்டங்களிலே சொல்லப்பட்டதை விலத்தி ஒருமித்த நாடு என்று சொல்லி அதற்கான வரைவிலக்கணத்தையும் அரசமைப்புச் சட்டத்திலே எழுதவேண்டுமென்று சொல்லி அனைவரும் இணங்கினதாக ஒரு இடைக்கால அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இது ஒரு வரைவாக விரைவிலே வரவிருக்கிறது. அதற்கு தெற்கிலே சிங்களக் கடும் தேசியவாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். ஒற்றையாட்சி அல்லது யுனிற்றரி ஸ்ரேற் என்பது கைவிடப்பட்டுவிட்டால் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டுவிடும், அப்படி பகிரப்பட்டால் நாடு பிரிந்துவிடும் என்று அங்கே பெரிய கோஷம் எழுப்புகிறார்கள். அவர்களிடத்தில்போய் அப்படி நாடு பிரிவதற்கு இடமில்லை, நாங்கள் ஒருமித்த நாட்டுக்கான வரைவிலக்கணத்திலேயே ஒருமித்த நாடு பிரிக்கப்படமுடியாத நாடு என எழுதியிருக்கின்றோம் என்று கூறுகின்றோம்.

ஆனால் நாடு தான் பிரிக்கப்பட முடியாததது. நாட்டினுடைய சுபாவம் தான் ஒன்றாக இருப்பது ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும். ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டால் மட்டும் தான் நாடு ஒன்றாக இருக்க முடியும். ஆட்சி அதிகாரங்கள் பெரும்பான்மை வாக்குகளினால் மட்டும் தீர்மானிக்கப்படுமாக இருந்தால் நாடு ஒன்றாக இருக்க முடியாது. இதனை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.

சிங்களப் பகுதிகளிலே பல இடங்களில் சென்று ஒரு விடயத்தைத் தெளிவாகச் சிங்களத்திலே சொல்லியிருக்கிறேன். அதாவது இதுகாலவரை எங்களுடைய நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலே எங்களுடைய இணக்கப்பாடு கிடையாது. 72 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு நாங்கள் எங்களுடைய இணக்கத்தைக் கொடுக்கவில்லை. 78 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்திற்கும் இணக்கத்தைக் கொடுக்கவில்லை. தமிழ் மக்களுடைய இணக்கமின்றித் தான் இந்த அரசமைப்புச் சட்டத்திலே நாங்கள் இன்றைக்கு ஆளப்படுகின்றோம். அரசமைப்புச் சட்டம் என்பது மற்றச் சட்டங்களைப் போன்றல்ல. அரசமைப்புச் சட்டமென்பது ஒரு சமூக ஒப்பந்தம்.

அதனை ஏன் சமூக ஒப்பந்தம் என்று சொல்கின்றார்கள் என்றால் அந்த நாட்டிலே வாழுகிற அனைத்து மக்களும் சேர்ந்து இணங்கி ஏற்றுக் கொள்கின்ற-கைச்சாத்திடுகின்ற ஒரு ஒப்பந்தம் என்பதாலே தான். சமூகத்தினுடைய ஒப்பந்தம். ஒரு நாட்டிற்கு ஒரு அரசமைப்புச் சட்டம் உருவாகும்பொழுது அந்த ஒப்பந்தத்திலே என்ன சொல்லப்படுகிறதென்றால், நாங்கள் ஒரு நாடாக வாழ்வதற்கு இணங்குகிறோம் என்பது தான் அந்த அரசமைப்புச சட்டத்தின் அடிப்படை.

நீங்கள் ஒரு நாடாக இருக்கவேண்டுமென விரும்புகின்றீர்களா? அவ்வாறு விரும்புவதாக இருந்தால் இந்தச் சமூக ஒப்பந்தத்திற்கு நாங்கள் இணங்கவேண்டும். அப்படி ஒரு நாடாக இருப்பதற்கு நாங்களய் இணங்குகிறோம் என்றும் சொல்லியிருக்கின்றோம். சிலருக்கு அது பிடிக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் ஒரு நாடாக இருப்பதற்கு ஒரு நாட்டிற்குள் வாழ்வதற்கு இணங்குகிறோம். அவ்வாறு இணங்குவதற்கு மக்கள் எமக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு நிபந்தனை. பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளே நாங்கள் வாழ்வதற்கு நாங்கள் இணங்குவதாக இருந்தால் ஆட்சி அதிகாரங்கள் முறையாகப் பிரிக்கப்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு எங்கள் பிரதேசங்களிலே நாங்கள் ஆளுகின்ற தத்துவங்கள் கொடுக்கப்பட்டால் மட்டும் தான் பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளே வாழ்வதற்கு இணக்கத்தை தெரிவிக்கின்றோம். அது தான் இந்த இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கத்திலே இருக்கிறது.

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டதாக மத்தியிலும் மாகாணத்திலும் இருக்கவேண்டும் என்று உள்ளது. ஆட்சி அதிகாரங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டால் சமஷ்டிக் கட்டமைப்பில் எப்படியாக இருக்குமோ அதாவது கொடுக்கப்பட்ட அதிகாரம் திரும்பப் பெறமுடியாதவாறு-கொடுக்கப்பட்ட விடயதானங்கள் மீது மத்திய ஆதிக்கம் செலுத்த முடியாதவாறு முறையாக அது பிரிக்கப்படுமாக இருந்தால் அந்த ஒரு நாட்டிற்குள்ளே வாழ்வதற்கான இணக்கப்பாட்டை நாங்கள் கொடுக்கத் தயார் என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றொம்.

ஆனால் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் நாங்கள் ஒரு நாட்டிற்குள்ளே வாழ்வதற்கான இணக்கப்பாட்டைக் கொடுப்பதற்குத் தயாரில்லை என்பதையும் சொல்லியிருக்கிறோம். இந்த நாடு ஒரு நாடாக முன்னேறவேண்டுமாக இருந்தால், இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் அப்படியாக ஒரு நாட்டிலே வாழ்வதற்காக தங்கள் இணக்கப்பாட்டைக் கொடுத்தாகவேண்டும். அப்போது தான் சமூக ஒப்பந்தம் உருவாக முடியும். அப்பொழுது தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட முடியும்.

நாங்கள் அதைச் செய்வதற்குத் தயார் என்று இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் சொல்லியிருக்கின்றோம். இரட்டை நிலைப்பாடு நாங்கள் எடுக்கவில்லை. இரட்டை நிலைப்பாடு எடுத்து இதனைத் தீர்க்க முடியாது. ஆனபடியால் தான் ஒரு நாட்டில் வாழ்வதற்கு நாங்கள் தயார் என்று சொன்னது பலருக்கு அதில் பிடிக்காவிட்டாலும் கூட நாங்கள் தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *