இலங்கை மீது மோடி கடும் அதிருப்தி! – மன்னிப்புக் கோரினார் ரணில்

இரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, இலங்கை அரசு தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் புதுடில்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டி வரும் தாமதம் குறித்தே இந்தியப் பிரதமர் தீவிரமான, ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.

இராஜதந்திர விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும் பகுதியை, இலங்கை விவகாரங்களுக்காக தாம் செலவழித்துள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய அரசால் வழங்கப்பட்ட உதவி தொடர்பாக இலங்கை அரசின் செயற்பாடு தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னைக் குறித்தோ, இந்திய அரசு குறித்தோ, ஏதேனும், கரிசனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதனை தயக்கமின்றி கலந்துரையாடுமாறும் இலங்கை பிரதமரிடம் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி மீதோ அவரது அரசின் மீதோ- தாமோ அல்லது இலங்கையர்களோ, எந்தச் சந்தேகத்தையும் அல்லது பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை என்று இலங்கை பிரதமர் பதிலளித்துள்ளார்

அத்துடன், ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பைக் கோருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

காத்மண்டுவில் அண்மையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் பேசிய போது, 2017 புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பான எல்லா விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

இதன்போது இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர், அபிவிருத்தித் திட்டங்களை மூல இலக்குடன் மீண்டும் முன்னகர்த்த தேவையான நடவடிக்கைகளைத் தாம் துரிதமாக எடுப்பதாக இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *