கிழக்குப் பல்கலை நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம், தமது சக மாணவியின் மரணச் சடங்குக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்காதமையைக் கண்டித்து, கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் நேற்று (18) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் நுளைவாயிலை முற்றுகையிட்ட மாணவர்கள், அமைதியான முறையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் அமர்ந்திருந்தனர்.

கிழக்குப் பல்லைக்கழகத்தின் கலை, காலாசார பீட யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த டானியல் சில்வேவியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்தார்.

குறித்த மாணவியின், மரண வீட்டுக்குச் செல்வதற்காக கலை, காலாசார பீட மாணவர்கள், பீடாதிபதி ஊடாக, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை (16) கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி உபவேந்தரிடம் குறித்த கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த கோரிக்கையை, பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், மறுப்புத் தெரிவித்திருந்தது.

நிர்வாகத்தின் இந்தச் செயற்பாட்டைக் கண்டித்தும் வருங்காலங்களில் மாணவர்களைப் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தக் கவனயீர்ப்புப் போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *