அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தில் கோர விபத்து! ரயிலில் மோதுண்டு 70 பேர் பரிதாப மரணம்!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில், ஏற்பட்ட கோர விபத்தில் 70 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஆணையர் சுத்ஷூ சேகர் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அமிர்தசரஸின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை.

தோபி காட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்தபோது, எதிர்பாராத விதமாக அது கீழே விழுந்தது. அந்த இடத்திற்கு அருகில் ரயில் கடவை இருந்தது. நெருப்பில் இருந்து தப்பிக்க ரயில் கடவைப் பக்கமாக மக்கள் ஓடியபோது, அங்கு ரயில் வந்ததில் அதில் அடிபட்டு பலரும் உயிரிழந்தனர் என்று பி.பி.சி. தெரிவித்துள்ளது. ரயில் தடத்தில் பலரின் சடலங்கள் காணப்படுகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமிர்தசரஸில் விபத்து நடந்த இடத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க செல்வதாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும், தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் எனவும், நிவாரண நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபடுவார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அரசு வைத்தியசாலைகளில் இதுவரை 40 சடலங்கள் பெறப்பட்டுள்ளன என்று பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ப்ரம் மொஹிந்த்ரா உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து பி.பி.சியிடம் பேசிய அமிர்தசரஸ் பொலிஸ் ஆணையர் எஸ் எஸ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 70 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.

இந்த விபத்துக்கு தனது இரங்கலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *