வீர மரணம் என்ற தகுதி பிரபாகரனுக்கே உண்டு! – மட்டக்களப்பில் பாரதிராஜா தெரிவிப்பு

“புலியைப் புறத்தால் விரட்டிய தமிழிச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால், வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு” என்று தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஓர் இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்வு மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நடைபெற்றது.

அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ், நடிகர் விதார்த், நடிகை நட்சத்திரா, திரைப்பட தொகுப்பாளர் சுரேஸ்காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலியைப் புறத்தால் விரட்டிய தமிழிச்சி என்று படித்திருக்கின்றேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனுக்கே உண்டு.

தமிழகம் ஓர் அற்புதமான பூமி. அங்கு வள்ளுவர் பிறந்தார். பெரிய பெரிய இலக்கிய மேதைகள் பிறந்தனர். கம்பர் கம்பராமாயணம் படைத்தார். ஆனால், தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என உலகத்துக்கு எடுத்துக்காட்டியது ஈழ மண்ணாகும்.

பெண்கள் கழுத்து முழுக்க நகை அணிந்து இரவு 12 மணிக்கு வீதியிலே சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புகிறார்களோ அன்றுதான் இந்த நாட்டுக்குப் பெருமையுண்டு – சுதந்திரம் உண்டு என மகாத்மா காந்தி அன்று சொன்னார்.

இது இந்தியாவில் நடக்கவில்லை. ஆனால், அவரது கனவை ஈழ மண்ணில் வன்னிப் பிரதேசத்தில் நேரடியாகப் பார்த்தேன். மனிதன் மறைந்து போனாலும் தமது தடயங்களைப் பதிவுசெய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இது இந்த பூமிக்கு நாம் செலுத்தவேண்டிய வாடகை. எமது பிறப்பில் எமது கலைகளைக் காப்பாற்ற வேண்டும். இந்த மேடையில் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்கள் உங்கள் தடங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.

ஈழ மண்ணில் அற்புதமான கலைஞர்க்ள உள்ளார்கள். பெரிய இலக்கியவாதிகள் உருவாகியுள்ளனர். இயக்குநர் பாலுமகேந்திரா இந்த மண்ணிலிருந்துதான் வந்திருந்தார்.

இங்குள்ளவர்களுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மிகச்சிறந்த கலைஞர்களாக உருவாகுவார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *